முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி
வேலூர் வெங்கடேஸ்வரா பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
வேலூர் வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1973-74-ம் கல்வி ஆண்டில் எஸ்.எஸ்.எல்.சி. படித்த மாணவர்கள் 50 ஆண்டுகளுக்கு பின்னர் சந்திக்கும் நிகழ்ச்சி அந்த பள்ளி வளாகத்தில் நடந்தது.
பள்ளியின் தலைமை ஆசிரியர் நெப்போலியன் தலைமை தாங்கினார். முன்னாள் மாணவர் ரகு வரவேற்றார். நிகழ்ச்சியில் 1973-74-ம் ஆண்டு பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. படித்து தற்போது அரசு அதிகாரிகள், காவல்துறை, வக்கீல்கள், தொழில் அதிபர்களாக காணப்படும் 70-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் தங்களின் பள்ளி காலத்தில் நடந்த சுவாரசியமான நினைவுகளை கூறி மகிழ்ந்தனர்.
பின்னர் அப்போது பள்ளியில் பணிபுரிந்த தலைமை ஆசிரியர், ஆசிரியர்களுக்கு முன்னாள் மாணவர்கள் சந்தன மாலை அணிவித்து நினைவு பரிசு வழங்கி கவுரப்படுத்தினர். பள்ளி வகுப்பறைகளில் உள்ள கரும்பலகைகளுக்கு வர்ணம் பூசுதல், பூந்தொட்டி, கைகழுவும் தொட்டிகளில் உள்ள குழாய்களை சீரமைத்தல் உள்ளிட்டவற்றை முன்னாள் மாணவர்கள் செய்து கொடுத்தனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள் சலபதி, ராமச்சந்திரன் ஆகியோர் செய்திருந்தனர்.