அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கக்கோரி ஈரோட்டில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் - முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்பு
அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கக்கோரி ஈரோட்டில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினா்
அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கக்கோரி ஈரோட்டில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் முன்னாள் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டம்
ஈரோடு மாவட்ட ஒருங்கிணைந்த அ.தி.மு.க. சார்பில் வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர் கே.வி.ராமலிங்கம் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் ஜெயக்குமார், பண்ணாரி, முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ., கே.சி.கருப்பணன் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினர்.
தமிழகத்தில் நடைபெற்று வரும் பல்வேறு ஊழல் முறைகேடுகள், அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் முதலியவற்றை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க. அரசை கண்டித்தும், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை உடனடியாக அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.
கஞ்சா -சாராய விற்பனை
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், முன்னாள் எம்.எல்.ஏ. ஈஸ்வரன், மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் எஸ்.டி.தங்கமுத்து, பகுதி செயலாளர்கள் மனோகரன், கோவிந்தராஜன், ஜெயலலிதா பேரவை மாவட்ட இணைச்செயலாளர் வீரக்குமார், பகுதி இணைச்செயலாளர் ஜெயராமன், மாணவர் அணி மாவட்ட இணைச்செயலாளர் நந்தகோபால், அண்ணா தொழிற்சங்க தலைவர் ஜீவா ராமசாமி, பெரியார் நகர் பகுதி அவைத்தலைவர் மீன்ராஜா, வக்கீல் அணி மாவட்ட தலைவர் துரைசக்திவேல், நிர்வாகி முருகானந்தம், முன்னாள் கவுன்சிலர் கே.எஸ்.கோபால், ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க அவைத்தலைவர் கே.சி.பொன்னுதுரை, பெருந்துறை தொகுதி முன்னாள் அ.தி.மு.க. செயலாளர் திங்களூர் கந்தசாமி, பெருந்துறை ஊராட்சி ஒன்றிய குழு முன்னாள் துணைத்தலைவர் வைஸ் ஆர்.பழனிச்சாமி, மாவட்டக் கழக இணைச் செயலாளர் மைனாவதி கந்தசாமி, மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் பி.அருணாச்சலம், பெருந்துறை கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் அருள்ஜோதி செல்வராஜ், துணைச் செயலாளர் டி.எஸ்.ஏ.அன்பரசு, பெருந்துறை பேரூர் கழக அ.தி.மு.க செயலாளர் வி.பி.கல்யாணசுந்தரம், பெருந்துறை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சாந்தி ஜெயராஜ், மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு செயலாளர் மாட்டின் ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
அ.தி.மு.க. ஆட்சியில் அத்திக்கடவு -அவினாசி குடிநீர் திட்டம் உள்பட பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. மேலும் பொதுமக்களுக்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. ஆனால் தி.மு.க. ஆட்சியில் வரி பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதால் வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மின் வினியோகம் அவ்வப்போது தடைப்படுகிறது. பஸ் சேவை குறைக்கப்பட்டதால் பெண்களுக்கு இலவச பஸ் பயணமும் கிடைக்கவில்லை.
கஞ்சா மற்றும் சாராய விற்பனை அதிகரித்து வருகிறது. பல பகுதிகளில் குடிநீர் வினியோகமும் பாதிக்கப்பட்டுள்ளன. மதுவின் மூலம் தி.மு.க.வுக்கு பல கோடி ரூபாய் வருமானம் தினசரி கிடைக்கிறது. நீட் தேர்வை ஒழிக்க வேண்டும் என்ற தனது தேர்தல் வாக்குறுதியை தி.மு.க. நிறைவேற்றவில்லை. அ.தி.மு.க. ஆட்சியின் திட்டங்கள் மட்டுமே தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளன. எனவே வருகிற நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும், அதைத்தொடர்ந்து தமிழக சட்டமன்ற தேர்தலிலும் 234 தொகுதியில் அ.தி.மு.க. அபார வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.