அமராவதி அணையில் தொடர்ந்து உபரி நீர் திறப்பு


அமராவதி அணையில் தொடர்ந்து உபரி நீர் திறப்பு
x
திருப்பூர்


அமராவதி அணையின் நீராதாரங்களில் பலத்த மழை பெய்து வருவதால் அணையில் இருந்து உபரிநீர் ஆற்றில் திறந்து விடப்பட்டு உள்ளது.

அமராவதி அணை

உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகின்ற சின்னாறு, தேனாறு, பாம்பாறு மற்றும் துணை ஆறுகளின் நீராதாரங்களை கொண்டு அமராவதி அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணை மூலம் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.

இந்த நிலையில் வனப்பகுதியில் நேற்று முன்தினம் மாலை பெய்த பலத்த மழையின் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, அன்று இரவு 9 மணியளவில் வினாடிக்கு 8 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. அதைத்தொடர்ந்து மதகுகள் வழியாக அமராவதி ஆற்றில் 9 ஆயிரத்து 650 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதன் பின்பு நீர்வரத்து குறைந்து போனது.

உபரி நீர் திறப்பு

இந்த நிலையில் நேற்று காலை 6 மணியளவில் அணைக்கு வந்து கொண்டிருந்த நீர்வரத்து 14 ஆயிரம் கனஅடியை கடந்தது. இதையடுத்து நீர்வரத்துக்கு ஏற்றவாறு உபரிநீரும் அதிக அளவில் திறந்து விடப்பட்டது. பின்னர் நீர்வரத்து சற்று குறைந்ததால் திறக்கப்பட்ட தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டது. ஆனால் மீண்டும் காலை 8 மணியளவில் நீர்வரத்து 9 ஆயிரத்து 500 கனஅடியை கடந்தது. இதையடுத்து 10ஆயிரத்து 750 கன அடி தண்ணீர் ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் அமராவதி அணை மற்றும் ஆற்றின் கரையோரங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தால் அமராவதி ஆறு மற்றும் பிரதான கால்வாய் மூலமாக கூடுதலாக உபரிநீர் திறப்பதற்கு உண்டான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அமராவதி அணையில் தொடர்ந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருவதால் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் அணை பகுதிக்கு திரண்டு வந்த வண்ணம் உள்ளனர். நேற்று மதியம் 1 மணி நிலவரப்படி 90 அடி உயரம் கொண்ட அணையில் 87.01 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 7 ஆயிரத்து 488 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 6 ஆயிரத்து 750 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.


Next Story