அமராவதி அணையின் நீர்மட்டம்ஒரே நாளில் 2 அடி உயர்வு


அமராவதி அணையின் நீர்மட்டம்ஒரே நாளில் 2 அடி உயர்வு
x
திருப்பூர்


மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால் அமராவதி அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்ந்துள்ளது.

அமராவதி அணை

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்குதொடர்ச்சி மலையில் உற்பத்தியாகின்ற நீராதாரங்களை கொண்டு அமராவதி அணை கட்டப்பட்டு உள்ளது. தமிழகம் மற்றும் கேரளா மாநில வனப்பகுதியில் உற்பத்தியாகும் சின்னாறு, தேனாறு, பாம்பாறு மற்றும் துணை ஆறுகள் மழைக்காலங்களில் அணைக்கு நீர்வரத்தை அளிக்கிறது. அதை ஆதாரமாகக் கொண்டு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.

அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு அமராவதி ஆறு மூலமாகவும், புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு பிரதான கால்வாய் மூலமாகவும் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அத்துடன் அமராவதி ஆறு மற்றும் பிரதான கால்வாயை அடிப்படையாகக் கொண்டு குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஒரே நாளில் 2 அடி உயர்வு

இந்த சூழலில் அணையின் நீராதாரங்களான கேரளா மாநிலத்தில் உள்ள மூணார், காந்தலூர், மறையூர் உள்ளிட்ட பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. இதன் காரணமாக ஆறுகள் மூலமாக அணைக்கு நீர்வரத்து ஏற்பட்டு உள்ளது.

குடிநீர் மற்றும் கருகும் நிலையில் உள்ள பயிர்களை காப்பாற்றும் வகையில் அணையில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக நீர் இருப்பு வேகமாக சரிந்து வந்தது. இந்த சூழலில் மழை பெய்து நீர் இருப்பை உயர்த்துவதற்கான சூழலை உருவாக்கி உள்ளது. அதன்படி நேற்று முன்தினம் காலை 48.17 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று காலை 50.20 அடியாக உயர்ந்து ஒரே நாளில் 2 அடி உயர்ந்து உள்ளது.

விவசாயிகள் மகிழ்ச்சி

இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். மேலும் சமவெளிப்பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பத்தின் தாக்குதல் குறைந்து இதமான சீதோஷண நிலை நிலவுகிறது. மேலும் வானம் மேக மூட்டமாக காணப்படுவதுடன் கனமழை பெய்வதற்கான சூழலும் நிலவுகிறது.

நேற்று காலை 6 மணி நிலவரப்படி 90 அடி உயரம் கொண்ட அணையில் அடி 50.20 உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 12 கன அடி தண்ணீர் வந்து கொண்டு உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.


Next Story