மதுபோதை தகராறில் கல்லால் தாக்கப்பட்டது அம்பலம்
பென்னாகரம்:-
பரோட்டா மாஸ்டர் சாவில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. மதுபோதை தகராறில் கல்லால் தாக்கப்பட்டதில் இறந்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக உறவுக்கார சிறுவன் கைது செய்யப்பட்டார்.
பரோட்டா மாஸ்டர்
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே மடம் கிராமத்தைச் சேர்ந்த எல்லப்பன் மகன் கணேசன் (வயது 45). பரோட்டா மாஸ்டர். இவர், தன்னுடைய உறவினர்களுடன் சேர்ந்து கடந்த 29-ந் தேதி இரவு மது அருந்தியதாக தெரிகிறநது.
மறுநாள் காலையில் கணேசன் தன்னுடைய வீட்டின் முன்பு தலையில் காயங்களுடன் இறந்து கிடந்தார். இதுகுறித்து ஒகேனக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டார்.
திடீர் திருப்பம்
பரோட்டா மாஸ்டர் கணேசன் சாவில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. அதாவது மதுபோதை தகராறில் கொலை செய்யப்பட்டது அம்பலமாகி உள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரணையை முடுக்கி விட்டனர். விசாரணையில் வெளியான தகவல்கள் விவரம் வருமாறு:-
கணேசனின் உறவுக்காரர்களான சுரேஷ் (29) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 3 பேரும் ஒன்றாக மது அருந்தி உள்ளனர். அப்போது வீட்டுக்கு சாப்பிட வருமாறு கணேசன் அவர்களை அழைத்துள்ளார். அப்போது 17 வயது சிறுவன் வர மறுத்துள்ளான்.
கல்லால் தாக்குதல்
அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது சிறுவன் கல்லை தூக்கி எறிந்துள்ளான். அது கணேசன் மீது பட்டு தலையில் பலத்த காயம் அடைந்து பரிதாபமாக இறந்துள்ளார்.
இந்த கொலை தொடர்பாக கணேசனின் உறவுக்கார சிறுவன் கைது செய்யப்பட்டார். கைதான சிறுவன் 12-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 4 மாதங்களாக பள்ளிக்கு செல்லாமல் படிப்பை பாதியில் நிறுத்தி விட்டான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.