அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தில் தொழில் செய்ய விரும்பும் பழங்குடியினருக்கு மானியம் கலெக்டர் தகவல்
அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தில் தொழில் செய்ய விரும்பும் பழங்குடியினருக்கு மானியம் வழங்கப்பட உள்ளதாக கலெக்டர் அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளார்.
மாவட்ட தொழில் மையத்தின் மூலமாக அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் குறித்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோர்களுக்கான விழிப்புணர்வு முகாம் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசுகையில், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தை, இந்த ஆண்டு முதல் மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் வகுப்பை சேர்ந்த தொழில் முனைவோர்கள் திட்ட மதிப்பீட்டில் 65 சதவீதம் வங்கி கடனாகவும், 35 சதவீதம் மானியமாகவும் பெறலாம். மேலும் முன் முனை மானியமாக அதிகபட்சமாக ரூ.1.50 கோடி வரை பெறலாம். வங்கிக்கடன் வட்டியில் 6 சதவீதம் வட்டி மானியமும் வழங்கப்படும்.
கல்வி தகுதி
ஏற்கனவே தொழில் செய்து வரும் பட்டியல் இனத்தவர், பழங்குடியினர், தொழிலை விரிவாக்கம் செய்யவும், புதியதாக தொழில் செய்ய விரும்புவோரும் இத்திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம். 18 முதல் 55 வயதுக்குட்பட்டோர் உற்பத்தி, சேவை, வணிகம் சார்ந்த தொழில் தொடங்கலாம். மேலும் இத்திட்டத்தில் விண்ணப்பிக்க கல்வி தகுதி ஏதும் இல்லை. வாகனங்களை முதன்மையாக கொண்டு செயல்படுத்தக்கூடிய தொழில்களான டாக்சி, சரக்கு வாகனங்கள், பொக்லைன் எந்திரம், கான்கிரீட் எந்திரம், அழகு நிலையம், ஆம்புலன்ஸ் சேவை, உடற் பயிற்சிக் கூடம், கயிறு தயாரித்தல், வியாபாரம், தரி அமைத்தல் மற்றும் உற்பத்தி சார்ந்த தொழில்கள் தொடங்குவோரும் இத்திட்டத்தில் பயன்பெறலாம். சுயமுதலீட்டில் தொழில் தொடங்கினாலும், இந்த திட்டத்தின் மூலம் மானியம் பெறலாம்.
தொழில் முனைவோர்
மேலும், கடலூர் மாவட்டத்தை சேர்ந்த பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் வகுப்பை சேர்ந்த தொழில் முனைவோர்கள் தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, தொழில் தொடங்கி இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம் என்றார். முகாமில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் விஜயகுமார், தாட்கோ மாவட்ட மேலாளர் மணிமேகலை, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அசோக் ராஜா, உதவி பொறியாளர் அறிவழகன், தலித் இந்தியன் தொழில் வர்த்தக கூட்டமைப்பு பிரதிநிதிகள், எஸ்.சி., எஸ்.டி. தொழில் முனைவோர் மற்றும் தொழிலகங்கள் வளர்ச்சி சங்க பிரதிநிதிகள், குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்கள் சங்க பிரதிநிதி, வர்த்தக தொழில் பார்வைக்கான ஆதிதிராவிடர் கூட்டமைப்பு பிரதிநிதி ஆகியோர் கலந்து கொண்டனர்.