அம்பேத்கர், கருணாநிதி பிறந்தநாளையொட்டிகல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி
அம்பேத்கர், கருணாநிதி பிறந்தநாளையொட்டி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி நடைபெற உள்ளது என்று தேனி கலெக்டர் தெரிவித்தார்.
தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், அம்பேத்கர், முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்தநாளையொட்டி கல்லூரி மாணவர்களுக்கு தேனி மாவட்ட அளவில் பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட உள்ளது. அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி வருகிற 1-ந்தேதியும், கருணாநிதி பிறந்தநாளையொட்டி வருகிற 2-ந்தேதியும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலக கூட்டரங்கில் போட்டிகள் நடக்கின்றன.
அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி, 'கற்பி, ஒன்று சேர், புரட்சி செய்', பூனா உடன்படிக்கை, புத்தரும் அவரின் தம்மமும், கூட்டாட்சி கோட்பாடும் பாகிஸ்தான் பிரிவினையும், சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர், 'சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்', அம்பேத்கரின் சாதனைகள், அம்பேத்கர் எழுதிய நூல்கள், அரசியல் சாசனத்தின் தலைமை சிற்பி, அம்பேத்கரும் பவுத்தமும் என்ற தலைப்புகளில் போட்டிகள் நடக்கின்றன. கருணாநிதி பிறந்த நாளையொட்டி, என் உயிரினும் மேலான அன்பு உடன் பிறப்புகளே, அண்ணா தம்பிக்கு எழுதிய கடிதங்கள், சமத்துவபுரம், திராவிடச் சூரியனே, பூம்புகார், நட்பு, குறளோவியம், கலைஞரின் எழுதுகோல், அரசியல் வித்தகர் கலைஞர், சமூக நீதி காவலர் கலைஞர் எனும் தலைப்புகளில் போட்டிகள் நடக்கின்றன. போட்டியில் முதல் 3 இடங்களை பிடிப்பவர்களுக்கு பரிசுத்தொகை, சான்றிதழ் வழங்கப்படும். இத்தகவலை தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தெரிவித்தார்.