புழல் அருகே சாலையை கடந்து செல்ல முயன்றவர் மீது மோதி கவிழ்ந்த ஆம்புலன்ஸ்


புழல் அருகே சாலையை கடந்து செல்ல முயன்றவர் மீது மோதி கவிழ்ந்த ஆம்புலன்ஸ்
x

புழல் அருகே சாலையை கடந்து செல்ல முயன்றவர் மீது மோதிய ஆம்புலன்ஸ் பக்கவாட்டில் கவிழ்ந்தது. இதில் ஒருவர் பலியானார். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

சென்னை

ஆம்புலன்ஸ் ேமாதி பலி

சென்னை மாதவரத்தில் இருந்து செங்குன்றத்தில் உள்ள ஒரு நோயாளியை ஏற்றுவதற்காக 108 ஆம்புலன்ஸ் நேற்று முன்தினம் இரவு வேகமாக வந்து கொண்டிருந்தது. புழல் சிறை அருகே ஜி.என்.டி. சாலையில் வந்தபோது, அந்த வழியாக சாலையை கடந்து செல்ல முயன்றவர் மீது ஆம்புலன்ஸ் மோதியது.

மேலும் அதே வேகத்தில் ஆம்புலன்ஸ் பக்கவாட்டில் கவிழ்ந்தது. ஆம்புலன்ஸ் வாகனம் மோதியதில் படுகாயம் அடைந்த சுமார் 52 வயது மதிக்கத்தக்க அந்த நபர் அதே இடத்தில் பரிதாபமாக இறந்து விட்டார். அவர் யார்?, எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை.

2 பேர் படுகாயம்

அத்துடன் ஆம்புலன்ஸ் வாகனம் கவிழ்ந்ததால் அதன் டிரைவரான தர்மபுரி மாவட்டம் மொரப்பூரைச் சேர்ந்த சேதுபதி(வயது 21), ஆம்புலன்ஸ்சில் வந்த மருத்துவ உதவியாளரான காஞ்சீபுரத்தை சேர்ந்த சந்திரசேகரன்(21) ஆகிய இருவரும் பலத்த காயம் அடைந்தனர்.

இருவரும் மீட்கப்பட்டு சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். சாலையில் கவிழ்ந்து கிடந்த ஆம்புலன்ஸ் வாகனம் அப்புறப்படுத்தப்பட்டது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story