ஆம்புலன்சை ஏற்றி மெக்கானிக்கை கொன்ற டிரைவர் கைது
விருதுநகரில் இருசக்கர வாகனத்தில் சென்ற டிவி மெக்கானிக்கை, ஆம்புலன்ஸ் வாகனத்தை மோதி கொலை செய்ததாக ஒப்புக்கொண்ட டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
விருதுநகரில் இருசக்கர வாகனத்தில் சென்ற டிவி மெக்கானிக்கை, ஆம்புலன்ஸ் வாகனத்தை மோதி கொலை செய்ததாக ஒப்புக்கொண்ட டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர்
டி.வி. மெக்கானிக்
விருதுநகர் பட்டம்புதூர் காலனி தெருவை சேர்ந்தவர் சங்கரலிங்கம் (வயது 42). இவர் விருதுநகர்-சாத்தூர் ரோட்டில் இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது ராமசாமிபுரத்தை சேர்ந்த முருகன் (31) என்பவர் ஓட்டிய ஆம்புலன்ஸ் இருசக்கர வாகனத்தில் மோதியதில் சங்கரலிங்கம் சம்பவ இடத்திலேயே பலியானார். இது பற்றி சங்கரலிங்கத்தின் மனைவி உமா முருகேஸ்வரி கொடுத்த புகாரின்பேரில் வச்சக்காரப்பட்டி போலீசார் வாகன விபத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
கொலை செய்தது அம்பலம்
இந்த நிலையில் உமா முருகேஸ்வரி தனது கணவர் சங்கரலிங்கத்தை முருகன் ஆம்புலன்ஸ் ஏற்றி கொலை செய்ததாக போலீசாரிடம் புகார் மனு கொடுத்தார். மேலும் சிலர் உடந்தையாக இருந்ததாகவும் அதில் தெரிவித்து இருந்தார். இதனை தொடர்ந்து போலீசார் முருகனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். முருகன் சங்கரலிங்கத்திடம் டிவி. பழுதுபார்க்க கொடுத்திருந்ததாகவும் அதற்காக ரூ.1500 கொடுத்ததாகவும் சங்கரலிங்கம் டி.வி.யை பழுது பார்த்து கொடுக்காமலும் பணத்தை திருப்பி தராமலும் இருந்ததால் இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரத்தில் முருகன் இருசக்கர வாகனத்தில் சென்ற சங்கரலிங்கத்தை ஆம்புலன்ஸ் ஏற்றி கொலை செய்ததை ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.
கைது
இதனைத் தொடர்ந்து போலீசார் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வாகன விபத்து வழக்கை கொலை வழக்காக மாற்றி முருகனை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.