நாடாளுமன்ற தேர்தலை குறிவைத்து மத்திய மந்திரி அமித்ஷா தமிழ்நாட்டிற்கு வரவில்லை
நாடாளுமன்ற தேர்தலை குறிவைத்து மத்திய மந்திரி அமித்ஷா தமிழ்நாட்டிற்கு வரவில்லை என்று நடிகை கஸ்தூரி திருப்பூரில் பேட்டியின் போது கூறினார்.
திருப்பூரில் இந்து மக்கள் கட்சி சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டு பேசினார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கலாசாரம்
கட்சிக்கு அப்பாற்பட்டு சித்தாந்த அடிப்படையில் இந்து மக்கள் கட்சியுடன் ஒரே நேர்க்கோட்டில் பயணிக்கிறோம். ஒத்த கருத்துடையவர்கள் நல்ல விஷயங்களுக்காக ஒன்று கூடி வருவதென்பது காலத்தின் கட்டாயமாக உள்ளது. என்னை பொறுத்தவரை எம்மதமும் சம்மதம் என்ற கொள்கை எனக்கு உண்டு. ஆனால் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தமிழ் கலாசாரத்தை சீரழிக்கிறது. காதலர் தின கொண்டாட்டத்தை தடை செய்ய வேண்டும் போன்ற இந்து மக்கள் கட்சி கொள்கையுடன் எனக்கு கருத்து வேறுபாடு கூட ஏற்பட்டதுண்டு.
நான் அதை ஏற்றுக்கொள்ளா விட்டாலும், அதன் பின்னால் இருக்கக்கூடிய ஜாக்கிரதை உணர்வை நான் ஏற்றுக் கொள்கிறேன்.
திராவிட கட்சிகள்
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நாடாளுமன்ற தேர்தலை குறிவைத்து தமிழ்நாட்டிற்கு வரவில்லை. ஒத்த கருத்துடைய கட்சிகளை பா.ஜ.க. கூட்டணியில் சேர்ப்பதற்கான முயற்சியாகவே பார்க்கலாம். தமிழகத்தில் பா.ஜ.க. படிப்படியாக வளர்ந்து வருகிறது. இங்கு திராவிட கட்சிகள் பல ஆண்டுகள் ஆண்ட நிலையில், அந்த போதையில் இருந்து தெளிந்த பிறகே மாற்றத்தை பற்றி பேச வேண்டும். சமீபத்தில் நடந்த ரெயில் விபத்து என்பது 21-ம் நூற்றாண்டில் நடந்திருப்பது கண்டிப்பாக ஒரு தலைகுனிவுதான். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரெயில் விபத்து நடந்த இடத்திற்கு செல்ல வேண்டிய அவசியமே இல்லை. ரெயில் விபத்து சதி என்று கூறப்படும் நிலையில் அப்படி இருந்தால் அது பயங்கரமாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.