அம்மா உணவகங்களின் தரம் குறைந்து விட்டது
நாகையில் உள்ள அம்மா உணவகங்களில், உணவு வகைகளின் தரம் குறைந்து விட்டது. எனவே அரசு தனிக்கவனம் செலுத்தி முன்பு போல் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகையில் உள்ள அம்மா உணவகங்களில், உணவு வகைகளின் தரம் குறைந்து விட்டது. எனவே அரசு தனிக்கவனம் செலுத்தி முன்பு போல் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அம்மா உணவகம்
அன்றாடம் கூலி வேலைக்கு செல்பவர்கள், சாலையோர வியாபாரிகள், சுமைதூக்கும் தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினருக்கும் மலிவு விலையில் வயிராற உணவு வழங்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்திற்காக கொண்டு வரப்பட்ட திட்டம் அம்மா உணவகம்.
தமிழகம் முழுவதும் மாநகராட்சிகள், நகராட்சி பகுதிகளில் அம்மா உணவகங்கள் இயங்கி வருகின்றன. கடந்த 2013-ம் ஆண்டு மார்ச் மாதம் 19-ந் தேதி சென்னை சாந்தோம் பகுதியில் அன்றைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா அம்மா உணவகத்தை தொடங்கி வைத்தார்.
காலை உணவாக இட்லி, பொங்கல், மதிய உணவாக சாம்பார் சாதம், எலுமிச்சை சாதம், கருவேப்பிலை சாதம் போன்ற கலவை சாதங்கள் இங்கு வழங்கப்பட்டு வருகின்றன. மலிவு விலையில் உணவு கிடைப்பதால் பொதுமக்களிடையே அம்மா உணவகங்களுக்கு மிகுந்த வரவேற்பு உள்ளது. தமிழகத்தில் தொடங்கப்பட்ட இந்த மலிவு விலை உணவு வினியோக திட்டம் மற்ற மாநிலங்களுக்கும் முன்னோடியாக திகழ்கிறது. தமிழகத்தைப்போல் ஆந்திரா, ராஜஸ்தான், மேற்கு வங்காளம், உத்தரப்பிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் இந்த திட்டம் தொடங்கப்பட்டது.
3 இடங்களில்...
நாகை மாவட்டத்தில் நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி, பழைய பஸ் நிலையம், வேதாரண்யம் நகராட்சி அலுவலகம் ஆகிய 3 இடங்களில் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த அம்மா உணவகங்களின் தற்போதைய நிலை என்ன?. இவைகள் தற்போது எப்படி இயங்குகிறது? அனைத்து உணவு வகைகளும் தரமாக இருக்கிறதா? தாராளமாக கிடைக்கிறதா?. முன்பு இருந்ததுபோல் அம்மா உணவகங்களில் கூட்டம் இருக்கிறதா? என்பதை இங்கே காண்போம்!.
கூட்டம் குறைந்து விட்டது
நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி மற்றும் பழைய பஸ் நிலையத்தில் உள்ள அம்மா உணவகங்களுக்கு முன்புபோல் தற்போது வாடிக்கையாளர்கள் வருவதில்லை. நாகையில் உள்ள அம்மா உணவகங்களில் உள்ள இட்லி, சாதம் தயார் செய்யும் பாய்லர்கள் சேதம் அடைந்து விட்டன. இதனை சரி செய்யாததால் கடந்த 6 மாதத்துக்கும் மேலாக காலை உணவான இட்லிக்கு பதில் தோசை விற்பனை செய்து வருகின்றனர். தனியாக உள்ள அடுப்பில் சாதம் தயார் செய்கின்றனர்.
உணவு தயாரிப்பதற்காக கொடுக்கும் மூலப்பொருட்களும் சரியாக வழங்குவதில்லை. இதனால் உணவின் தரம் கேள்விக்குறியாக உள்ளது. அம்மா உணவகங்களுக்கு சாப்பிட வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்து உள்ளது.
ஊதியம் வழங்கப்படவில்லை
அம்மா உணவகத்தில் விற்பனை குறைந்த நிலையில் பணியாளர்களுக்கு கடந்த 2 மாதங்களாக ஊதியம் வழங்கப்படாமல் உள்ளது. தினசரி ரூ.3,600-க்கு விற்பனை செய்ய வேண்டிய நிலையில் ரூ.2 ஆயிரத்திற்கு மட்டுமே விற்பனையாகி வருகிறது.
இதுகுறித்து நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் செயல்பட்டு வரும் அம்மா உணவக பொறுப்பாளர் சித்ரா கூறும்போது அம்மா உணவகத்திற்கு உணவு தயாரிக்க தேவையான மளிகை பொருட்களை சரியாக வழங்குவது இல்லை. பின்னர் எப்படி தரமான உணவு சமைக்க முடியும்?. இருக்கும் மளிகை பொருட்களை வைத்து சுத்தமாக உணவு தயார் செய்து வழங்குகிறோம். சில சமயங்களில் எங்களது கை காசை போட்டு செலவு செய்கிறோம்.
இட்லிக்கு பதில் தோசை
எங்களுக்கு சம்பள பாக்கி உள்ளதால், குடும்பம் நடத்துவதற்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. பாய்லர் சேதம் அடைந்து விட்டதால் இட்லி சமைக்க முடியாது.
எனவே தனியாக அடுப்பு வைத்து இட்லிக்கு பதில் தோசை சுட்டு விற்று வருகிறோம். இது நேரத்தை அதிகப்படுத்துவதுடன், எங்களுக்கு வேலைப்பளுவும் அதிகமாகிறது என்றார்.
உணவின் தரம் குறைந்து விட்டது
வேளாங்கண்ணியை சேர்ந்தவரும், நாகையில் சரக்கு ஆட்டோ ஓட்டி வருபவருமான ராமகிருஷ்ணன்:-
நான் நாகை நகர் பகுதியில் சரக்கு ஆட்டோ ஓட்டி வருகிறேன். அம்மா உணவகத்தால் எனக்கு சாப்பாடு தேவை குறைந்த விலையில் பூர்த்தியாகி வந்தது. நான் நாகையில் உள்ள இரண்டு அம்மா உணவகங்களிலும் சாப்பிடுவேன். முன்பிருந்ததை விட தற்போது அம்மா உணவகத்தில் வழங்கும் உணவில் மாற்றம் உள்ளது. உணவின் தரம் குறைந்துவிட்டது. தரம் குறைந்ததால், சுவையும் இல்லாமல் போய்விட்டது.
பசி ருசியை அறியாது என்பது போல பேரளவுக்கு சாப்பிட்டு வருகிறேன். முன்பிருந்தாற்போன்று மீண்டும் அம்மா உணவகத்தில் தரமான உணவை வழங்கினால் எங்களை போன்ற தொழிலாளர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றார். அம்மா உணவகங்களில் தரமான உணவு வழங்க அரசு தனிக்கவனம் செலுத்த வேண்டும்.
ஏழைகளுக்கு கிடைத்த வரப்பிரசாதம்
வெள்ளப்பள்ளத்தை சேர்ந்த சசிகலா:- ஒரு ரூபாய்க்கு இட்லி, ரூ.5-க்கு சாம்பார் சாதம், ரூ.3-க்கு தயிர் சாதம் என மலிவு விலையில் அம்மா உணவகத்தில் சுடச்சுட உணவு வழங்கப்படுவது ஏழைகளுக்கு கிடைத்த வரப்பிரசாதமாக இருந்து வருகிறது. தற்போது நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் உள்ள அம்மா உணவகத்தில் தரமான உணவு வழங்கப்படவில்லை. கடமைக்கு வழங்கப்படுகிறது. இதனால் மக்கள் கூட்டம் வருவதில்லை.
எனவே தமிழக அரசு அம்மா உணவகங்கள் மீது தனிக்கவனம் செலுத்தி தரமான உணவு வழங்கப்படுகிறதா? என கண்காணிக்க வேண்டும். மேலும் கூடுதல் நிதி ஒதுக்கி உணவகங்கள் முன்பு போல் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.