ஏழை மக்களின் பசியை போக்கும் அம்மா உணவகங்கள்


ஏழை மக்களின் பசியை போக்கும் அம்மா உணவகங்கள்
x

அம்மா உணவகங்களில் சாப்பிட வரும் மக்கள்கூட்டம் குறைந்து வருவதால் வித விதமான உணவு வகைகளை விற்பனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர்.

வேலூர்

அம்மா உணவகங்களில் சாப்பிட வரும் மக்கள்கூட்டம் குறைந்து வருவதால் வித விதமான உணவு வகைகளை விற்பனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர்.

அம்மா உணவகம்

தமிழகத்தில் உள்ள ஏழை எளிய மக்கள், அன்றாட கூலி வேலை செய்பவர்கள், டிரைவர்கள், சுமை தூக்குபவர்கள் என குறைந்த ஊதியம் பெறுபவர்கள் ஓட்டல்களில் அதிக விலை கொடுத்து உணவு வாங்கி சாப்பிட வேண்டிய நிலை இருந்தது. எனவே ஏழைகள் பயன்பெறும் வகையில் 2013-ம் ஆண்டின்போது முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதாவால் கொண்டு வரப்பட்ட திட்டம் தான் அம்மா உணவகம்.

வேலூர் மாநகராட்சியில் அண்ணா சாலை தபால் நிலையம் அருகில், கஸ்பா, கொசப்பேட்டை, பாகாயம், விருபாட்சிபுரம், ரங்காபுரம், அலமேலுமங்காபுரம், கலெக்டர் அலுவலகம் எதிரில், தாராபடவேடு, காட்பாடி காந்தி நகர் என 10 இடங்களில் அம்மா உணவகம் உள்ளது. மேலும், குடியாத்தம் மற்றும் பேரணாம்பட்டு நகராட்சியிலும் இந்த அம்மா உணவகங்கள் செயல்படுகிறது.

வரப்பிரசாதம்

காலை உணவாக இட்லி ஒரு ரூபாய்க்கும், மதிய உணவாக சாம்பார் சாதம் 5 ரூபாய்க்கும், தயிர் சாதம் 3 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. டோக்கன் சிஸ்டம் பின்பற்றப்படுகிறது.

உணவு தயாரிப்பதற்கு ஓட்டல்களில் உள்ளதைபோன்று நவீன கருவிகளும், மாவரைப்பதற்கு நவீன எந்திரமும் பயன்படுத்தப்படுகிறது.

இந்த அம்மா உணவகங்கள் முதன் முதலில் திறக்கப்பட்டபோது மக்கள் கூட்டம் அலைமோதியது. இங்கு ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு இல்லை. அனைவரும் சமம் என்ற நிலை இந்த திட்டத்தின் மூலம் வெளிக்காட்டப்பட்டுள்ளது. இங்கு குடும்பத்துடன் சென்று உணவு உண்டு மகிழ்ந்தனர். ஏழை மக்களுக்கும், கூலித் தொழிலாளர்களுக்கும், வெளியூர்களில் இருந்து வந்து தங்கி வலை செய்பவர்களுக்கும் மிகப்பெரிய வரப்பிரசாதமாக இந்த உணவகம் அமைந்துள்ளது. லட்சக்கணக்கான மக்கள் இதன் மூலம் பயனடைந்து வருகின்றனர்.

ஆனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட காலம் முதல் அம்மா உணவகங்கள் மூடப்படும் என்ற தகவல் அவ்வப்போது பரவி வருகிறது,

குறைந்து வருகிறது

எனினும் பலர் அம்மா உணவகத்தை நம்பி காலத்தை கழித்து வருகின்றனர். குறிப்பாக கொரோனா காலக்கட்டத்தில் இதனை நம்பி தான் பலர் வாழ்ந்து வந்தனர். ஏராளமான வடமாநிலத்தவர்கள் வேலைக்காகவும், மருத்துவ சிகிச்சைக்காகவும் வேலூருக்கு வருகின்றனர். கொரோனா ஊரடங்கு அமலில் இருந்தபோது ஓட்டல்கள், சிறிய உணவகங்கள் மூடப்பட்டபோது அவர்களுக்கு அம்மா உணவகம் தான் உணவளித்தது.

ஒரு உணவகத்தில் சுமார் 7 பெண்கள் முதல் 12 பெண்கள் வரை சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர். வேலூர் கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள அம்மா உணவகத்தில் தற்போது மக்கள் கூட்டம் குறைந்த அளவே உள்ளதாக பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் அவர்கள் கூறுகையில், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்கள் ஒன்றாக இருந்தபோது கலெக்டர் அலுவலகத்துக்கு ஏராளமான பொதுமக்கள் வருவார்கள். அப்போது விற்பனை களைகட்டியது. தற்போது கூட்டம் குறைந்ததற்கு காரணம் மாவட்டம் பிரிக்கப்பட்டதால் கலெக்டர் அலுவலகத்துக்கு அப்போது போல் மக்கள் வராததும் காரணம் என்றனர்.

வேலூர் தலைமை தபால் நிலையம் அருகே உள்ள அம்மா உணவகத்தின் அருகே வெங்கடேஸ்வரா பள்ளி, ஊரீசு பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் அதிகம் உள்ளது. மேலும் தபால் நிலையம், மருத்துவமனை என அரசு அலுவலகங்களும் அதிகமாக உள்ளது. எனவே அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பொதுமக்கள், பள்ளி கல்லூரி மாணவர்களும் பலர் அம்மா உணவகத்தில் சாப்பிட்டு வருகின்றனர்.

ஓட்டல்கள், சிறிய உணவகங்கள், மெஸ் ஆகியவற்றில் காலை மதியம் சாப்பிட வேண்டுமென்றால் குறைந்த பட்சம் ரூ.150 வரை உணவுக்காக செலவிட வேண்டும். ஆனால் இந்த அம்மா உணவகங்களில் காலை, மதியம் 2 நேரங்களிலும் ரூ.20 முதல் ரூ.20-க்கு வயிராற சாப்பிட்டு விடலாம்.

அதனால் இந்த உணவகம் ஏழை மக்களுக்கு வரப்பிரசாதமாகும். இந்த உணவகம் சென்னை மாநகரை போன்று இரவிலும் செயல்பட்டால் இன்னும் ஏழை மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். மேலும் திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்ட அம்மா உணவகங்களில் காலை இட்லியை தவிர பொங்கல், தோசை, சித்ரான்னம் எனப்படும் வெரைட்டி ரைஸ்களும் வழங்கப்படுகின்றன. சென்னை மாநகராட்சியில் இரவில் சப்பாத்தி வழங்கப்படுகிறது. இதனால் 3 வேளையும் ஏழை ெதாழிலாளர்கள் வயிராற சாப்பிடுகின்றனர்.

எனவே வேலூர் மாநகராட்சி, குடியாத்தம், பேரணாம்பட்டு நகராட்சி அம்மா உணவகங்களிலும் அதுபோன்று உணவுவகைகளை வழங்க வேண்டும் என அங்கு வரும் வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வேலூரில் முதியவர்கள், கைவிடப்பட்டவர்கள், ஆதரவற்றவர்கள் பலர் உள்ளனர். அவர்களை வாழ வைப்பது அம்மா உணவகம் என்று கூறலாம். குறைந்த விலையில் உணவு என்பதால் இவர்கள் அம்மா உணவகத்தில் இருவேளை வயிறு நிறைய சாப்பிடுகின்றனர். இரவில் வேறு ஓட்டல்களில் அதிக விலை கொடுத்து உணவு வாங்கி சாப்பிட வேண்டிய நிலை உள்ளது. எனவே அம்மா உணவகத்தில் இரவிலும் உணவு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கையாக உள்ளது. இதற்கு அரசு செவிசாய்க்க வேண்டும்.

ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும்

-பணியாளர்கள்

அம்மா உணவகத்தில் வேலை பார்ப்பவர்கள் மகளிர் சுயஉதவிக்குழுக்களை சேர்ந்த பெண்களாக உள்ளனர். அவர்கள் தங்கள் வீட்டைபோன்று அம்மா உணவகத்தை பராமரிப்பதில் அக்கறை காட்டுகின்றனர். இந்த உணவகங்களில் தூசி கூட இல்லாத அளவுக்கு சுத்தம் செய்கின்றனர்.

ஆனால் இவர்களுக்கு குறைந்த அளவிலான ஊதியம் வழங்கப்படுகிறது. அதிகாலை முதல் மாலை வரை பணி செய்யும் தங்களுக்கு ஊதியத்தை உயர்த்தி தரவேண்டும். சமைக்க பயன்படுத்தும் பொருட்களில் சில பொருட்கள் பழுதோ அல்லது சேதமோ ஏற்பட்டால் நாங்கள் எங்களது பணத்தை செலவழித்து அதை சரிசெய்கிறோம் என அவர்கள் தெரிவித்தனர். சில அம்மா உணவகங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் எந்திரம், குக்கர், மிக்சி போன்றவை பழுதாகி உள்ளதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.

வினோத்குமார்:

நான் கட்டிட மேஸ்திரியாக பணியாற்றி வருகிறேன். நகரின் பல்வேறு இடங்களுக்கு வேலைக்கு செல்வேன். குறைந்த வருமானம் உள்ளதால் கடையில் வாங்கி உணவு சாப்பிட முடியாது. எனவே அம்மா உணவகம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து நான் அம்மா உணகவகத்தில் தான் சாப்பிட்டு வருகிறேன். என்னை போல் ஏராளமான கூலி தொழிலாளர்களின் பசியை அம்மா உணவகம் போக்குகிறது. தரமான மற்றும் சுவையான உணவு வழங்கப்படுகிறது. சில நேரங்களில் கூலி கிடைக்காமல் போகும். அந்த நேரங்களில் டீ குடிக்கும் பணத்தில் மதிய உணவை நான் சாப்பிட்டு விடுவேன். இந்த திட்டத்தை மேம்படுத்த வேண்டும்.

போளூரை சேர்ந்த மல்லிகா:

நான் மற்றும் எனது கிராமத்தை சேர்ந்தவர்கள் வேலூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வருவோம். வரும்போதெல்லாம். அம்மா உணவகத்தில் தான் சாப்பிடுவோம். சுத்தமாகவும், தரமாகவும் வழங்கப்படுகிறது. குறைந்த விலையில் வயிறு நிறைந்துவிடுகிறது. நாங்கள் சாப்பிடும் போது ஏராளமான அரசு அதிகாரிகளும், தனியார் துறைகளில் வேலைபார்ப்பவர்களும் பலர் எங்களுடன் அமர்ந்து சாப்பிடுவார்கள். இங்கு சமம் என்ற நிலை நிலவுவதை பார்க்க முடிகிறது.

வளைகாப்பு


Next Story