அம்மையப்பன் பள்ளி வளாக மரத்தடியில் மாணவர்களுக்கு பாடம் நடத்தும் அவலம்


அம்மையப்பன் பள்ளி வளாக மரத்தடியில் மாணவர்களுக்கு பாடம் நடத்தும் அவலம்
x

அம்மையப்பன் பள்ளி வளாக மரத்தடியில் மாணவர்களுக்கு பாடம் நடத்தும் அவலம்

திருவாரூர்

புதிய கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கியும் இதுவரை கட்டவில்லை. இதனால் அம்மையப்பன் பள்ளி வளாக மரத்தடியில் மாணவர்களுக்கு பாடம் நடத்தி வரும் அவலம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நடவடிக்ைக எடுக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி

கொரடாச்சேரி ஒன்றியத்தில் பெரிய ஊராட்சியாக இருந்துவரும் அம்மையப்பனில் தேசிய நெடுஞ்சாலையின் இரு புறங்களையும் பிரித்து அம்மையப்பன் மேற்கு, கிழக்கு ஆகிய இரண்டு பகுதிகளில் நடுநிலைப்பள்ளிகள் இயங்கி வந்தன. அதில் அம்மையப்பன் மேற்கு பள்ளியில் அம்மையப்பன் அக்கரை, இளங்குடி, புதுப்பாலத் தெரு ஆகிய பகுதிகளை சேர்ந்த குடியிருப்புகளில் உள்ள மாணவ, மாணவிகள் தொடக்க- நடுநிலை வகுப்புகளில் சேர்ந்து பயின்று வந்தனர்.

இந்த பள்ளியின் வழியாக புதிதாக அமைய உள்ள தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணியின் காரணமாக பள்ளியை அப்புறப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

ரூ.37 லட்சம் நிதி ஒதுக்கீடு

இதற்கான முறையான அரசு கடிதம் நெடுஞ்சாலைத்துறையால் 2009-ம் ஆண்டு வழங்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து நிலத்தை கையகப்படுத்தி கொண்ட நெடுஞ்சாலைத்துறை அதற்கு ஈடாக மாற்று இடத்தில் புதிய கட்டிடம் கட்டிக்கொள்வதற்கு 2014-ம் ஆண்டு ரூ.37 லட்சத்தை கொரடாச்சேரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் செலுத்தியது. புதிய கட்டிடம் கட்டுவதற்கான இடங்களை தேர்வு செய்து கட்டி கொள்வதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பள்ளி தலைமை ஆசிரியருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுநாள் வரை அப்பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டப்படவில்லை. தற்போது தேசிய நெடுஞ்சாலையின் விரிவாக்க பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதையடுத்து பள்ளியின் கட்டிடம் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் இடிக்கப்பட்டது.

மரத்தடியில் பாடம் நடத்தி வரும் அவலம்

இதனால் இந்த பள்ளியில் படித்த மாணவர்களுக்கு அருகில் உள்ள அம்மையப்பன் கிழக்கு நடுநிலைப்பள்ளி மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் தனித்தனியே அமர்த்தி பாடம் நடத்தப்பட்டது. அம்மையப்பன் கிழக்கு பள்ளியில் ஏற்கனவே மாணவர்கள் அதிகம் உள்ள நிலையில், மேற்கு பள்ளி மாணவர்களும் அங்கு அனுப்பப்பட்டதால் இட நெருக்கடி ஏற்பட்டது. இதனால் அம்மையப்பன் மேற்கு பள்ளியில் இருந்து சென்ற மாணவர்கள் மரத்தடிகளிலும், வராண்டாவிலும் அமர வைக்கப்பட்டு ஆசிரியர்கள் பாடம் நடத்தி வரும் அவலம் உள்ளது. மாணவர்களுக்கு போதிய இடவசதி மற்றும் கழிப்பிட வசதி இல்லாததால் அம்மையப்பன் மேற்கு பள்ளியில் படித்து வந்த மாணவர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஏற்கனவே ஒதுக்கப்பட்ட நிதி மூலம் போதிய அடிப்படை வசதிகளுடன் புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டு்ம் என மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story