துர்க்கை அம்மனுக்கு வைகாசி வெள்ளி சிறப்பு அபிஷேகம்

திருப்பூர் மாவட்டம் நத்தக்காடையூர் பாலசவுந்திரவல்லி உடனமர் ஜெயங்கொண்டேஸ்வரர் கோவிலில் வைகாசி மாத வெள்ளிக்கிழமையை முன்னிட்டு துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக பூஜை நேற்று காலை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு நேற்று காலை 9 மணிக்கு நாட்டில் நல்ல மழை பெய்யவும், திருமணம் ஆன புதுமண தம்பதிகள், பக்தர்கள் அனைவரும் நீண்ட ஆயுளுடன் நோய் நொடியின்றி வாழ்ந்திடவும், வர்த்தகர்கள், பொதுமக்கள் பொருளாதார நிலை மேம்படவும், திருமணத்தடை நீங்கிடவும் கோவில் வளாகத்தில் உள்ள துர்க்கை அம்மனுக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், திருமஞ்சனம் மூலம் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை பூஜை நடைபெற்றது.
விழா நிறைவாக பக்தர்கள், சுமங்கலி பெண்களுக்கு குங்குமம், பிரசாதங்கள், சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது. விழாவில் நத்தக்காடையூர், பழையகோட்டை, குட்டப்பாளையம், முள்ளிப்புரம், மருதுறை வருவாய் சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை துர்க்கை வார வழிபாட்டு குழுவினர் செய்திருந்தனர்.