ஆடி கடைசி வெள்ளிையயொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை திரளான பக்தர்கள் சாமி தரிசனம்


ஆடி கடைசி வெள்ளிையயொட்டி  அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை  திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
x

ஆடி கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது

நாமக்கல்

ஆடி கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது

பலப்பட்டரை மாரியம்மன்

ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி நாமக்கல் ராஜீவ் காந்தி நகரில் உள்ள மங்கள மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. முன்னதாக மாரியம்மனுக்கு பால், இளநீர், மஞ்சள், சந்தனம், தேன் உள்பட 16 பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டன. இதை தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது. பின்னர் மாரியம்மன் வளையல் காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல் பலப்பட்டரை மாரியம்மன் கோவிலில் ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. முன்னதாக மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. பின்னர் சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நித்திய சுமங்கலி மாரியம்மன்

நாமக்கல் அருகே வேலாகவுண்டம்பட்டியில் உள்ள மாரியம்மன் கோவிலில் ஆடி பவுர்ணமி மற்றும் கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. பின்னர் மாரியம்மனுக்கு எலுமிச்சை பழங்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் நடந்தன. அம்மன் ஆயிரம் கண்ணுடையாள் அலங்காரத்தில் அருள்பாலித்தார். ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் காலை முதல் இரவு வரை வரிசையில் நின்று அம்மனை தரிசித்தனர். பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக கோவிலுக்கு வந்திருந்த பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கினர். அதேபோல் எல்லை மாரியம்மன் கோவில், அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், புதுப்பட்டி துலுக்க சூடாமணி அம்மன் கோவில், கூனவேலம்பட்டி அழியா இலங்கை அம்மன் கோவில், அத்தனூர் அம்மன் கோவில், பாரக்கல் புதூர் அத்தனூர் அம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது.

பொன் காளியம்மன் கோவில்

நாமகிரிப்பேட்டை அருகே ஆர்.பி. காட்டூர் கிராமத்தில் உள்ள பொன் காளியம்மன் கோவிலில் ஆடி வெள்ளி மற்றும் திருவிழா நடந்தது. நேற்று முன்தினம் இரவு பெண்கள் கலந்து கொண்ட திருவிளக்கு சிறப்பு பூஜை நடந்தது. இந்த நிலையில் நேற்று பால்குட ஊர்வலம் நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

திருச்செங்கோடு சி.எச்.பி காலனியில் உள்ள அருள் மாரியம்மன் கோவிலில் ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. இதையடுத்து அம்மன் வளையல் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story