வால்பாறையில் அம்மன் கோவில், வீடுகளை சேதப்படுத்திய காட்டு யானைகள்-பொதுமக்களை விரட்டியதால் பரபரப்பு
வால்பாறையில் அம்மன் கோவில், வீடுகளை சேதப்படுத்திய காட்டு யானைகள், பொதுமக்களை விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
வால்பாறை
வால்பாறையில் அம்மன் கோவில், வீடுகளை சேதப்படுத்திய காட்டு யானைகள், பொதுமக்களை விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
3 யானைகள்
கோவை மாவட்டம் வால்பாறை சிங்கோனா பகுதியில் அரசு தேயிலை தோட்ட வளர்ச்சி கழகத்திற்கு சொந்தமான தொழிலாளர்கள் குடியிருப்பு உள்ளது. இந்த பகுதிக்குள் நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணி அளவில் 3 காட்டு யானைகள் புகுந்தன. பின்னர் அந்த யானைகள் செந்தில் என்பவரின் வீட்டு ஜன்னலை உடைத்து துதிக்கையை உள்ளே விட்டு கட்டிலுக்கு அடியில் வைத்திருந்த ரேஷன் அரிசியை எடுத்து தின்று விட்டு வீட்டுக்குள்ளிருந்த பொருட்கள் முழுவதையும் உடைத்து சேதப்படுத்தியது.
செந்தில் வீட்டில் இல்லாததால் அருகில் இருந்த தொழிலாளர்கள் வந்து யானைகளை விரட்டியுள்ளனர். ஆனால் அங்கிருந்த போகாத யானைகள் அருகில் இருந்த ராஜேந்திரன் என்பவரின் வீட்டு கதவு, ஜன்னலையும் உடைத்து வீட்டுக்குள்ளிருந்த பொருட்களை சேதப்படுத்தியது. குடியிருப்பு பகுதியில் இருந்த தொழிலாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து யானைகளை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் வனத்துறையினர் அங்கு வந்து பொதுமக்களோடு சேர்ந்து காட்டு யானைகளை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.
தலைதெறிக்க ஓட்டம் பிடித்த பொதுமக்கள்
அப்போது ஆவேசமடைந்த யானைகள் பொதுமக்கள் மற்றும் வனத்துறையினரை நோக்கி வேகமாக ஓடிவந்ததோடு அவர்களை விரட்டியது. இதனால் அவர்கள் அனைவரும் அங்கிருந்து தலைதெறிக்க ஓட்டம் பிடித்தனர்.
நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு அங்கிருந்து வனப் பகுதிக்கு சென்ற யானைகள் அருகில் இருந்த மாரியம்மன் கோவில் கருவறை கதவை உடைத்து உள்ளிருந்த அம்மனின் அலங்கார பொருட்கள், பாத்திரங்கள், அம்மனுக்கு அணிவிக்கும் சேலைகள் அனைத்தையும் வெளியே தூக்கி வீசியெறிந்து சேதப்படுத்தி விட்டு சென்றது. இதனால் பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்கள் அச்சத்தில் உள்ளார்கள்.