அம்மணி அம்மன் மடத்தில் ஆக்கிரமிப்பு கட்டிடம் இடித்து அகற்றம் மடமும் இடிக்கப்பட்டதால் இந்து அமைப்பினர் போராட்டம்


தினத்தந்தி 18 March 2023 11:25 AM GMT (Updated: 2023-03-18T22:24:54+05:30)
திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரருக்கு கோவிலுக்கு சொந்தமான அம்மணி அம்மன் மடத்தில் ஆக்கிரமிப்பு அகற்றத்தின் போது மடமும் இடிக்கப்பட்டது. அதனை கண்டித்து இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அம்மணி அம்மன் மடம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் 4 கோபுர நுழைவு வாயில்கள் உள்ளன. இதில் அம்மணி அம்மன் கோபுரம் நுழைவு வாயில் எதிரில் இக்கோவிலுக்கு சொந்தமான அம்மணி அம்மன் மடம் உள்ளது. இந்த அம்மணி அம்மன் மடத்தை திருவண்ணாமலையை சேர்ந்த பா.ஜ.க. நிர்வாகி ஒருவர் ஆக்கிரமித்து மடத்தின் இடத்தில் மாடி வீடு கட்டியும், மடத்தின் முன்பு கார் நிறுத்தும் ஷெட்டும் அமைத்து இருந்ததாக கூறப்படுகிறது. இதன் மதிப்பு சுமார். ரூ.50 கோடி இருக்கும் என்று தெரிகிறது.

கோவிலுக்கு சொந்தமான அந்த மடத்தை அவரிடம் இருந்து மீட்க அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் சார்பில் திருவண்ணாமலை சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கினை விசாரித்த திருவண்ணாமலை சார்பு நீதிமன்றம் அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான அம்மணி அம்மன் மடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடத்தை இடித்து அகற்ற உத்தரவு பிறப்பித்தது.

ஆக்கிரமிப்புகள் அகற்றம்

இதையடுத்து நேற்று காலை வருவாய்த் துறையினர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அங்கு சென்றனர். அவர்கள் அங்சு ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டிடத்தை இடித்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது கட்டிடம் பொக்லைன் எந்திரங்கள் மூலம் இடிக்கப்பட்டது.

அங்கு நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றதால் அம்மணி அம்மன் கோபுரம் வழியாக நேற்று காலை முதல் மதியம் வரை கோவிலுக்குள் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. அம்மணி அம்மன் கோபுரத் தெருவிற்குள் யாரும் செல்லாதவாறு போலீசார் மூலம் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது.

காலையில் கோவில் பணியாளர்கள் அம்மணி அம்மன் மடத்தில் இருந்த அறைகளை காலி செய்து மூடி 'சீல்' வைத்தனர். ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

அம்மணி அம்மன் மடம் இடிப்பு

தொடர்ந்து மாலை 4 மணியளவில் திடீரென கோவில் நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரில் அம்மணி அம்மன் மடமும் இடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதையடுத்து அந்த முகப்பு பகுதியில் இருந்து பொக்லைன் எந்திரத்தின் மூலம் இடிக்கும் பணி தொடங்கியது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஆன்மிகவாதிகள் இந்து அமைப்பினருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். அதனை தொடர்ந்து இந்து அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் அங்கு வந்தனர்.

அப்போது மடம் பாதி இடிக்கப்பட்டு காணப்பட்டு உள்ளது. இதையடுத்து அவர்கள் இடிக்கப்பட்ட மடத்தின் அருகில் சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோவில் நிர்வாக அலுவலர்களிடம் இது குறித்து கேட்ட போது அவர்கள் முறையாக பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

பொக்லைன் எந்திரங்கள் அகற்றம்

தொடர்ந்து அந்த இடத்திற்கு ஏராளமானோர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த போராட்டம் இரவு 7.30 மணி வரை நடைபெற்றது. அதை தொடர்ந்து அங்கிருந்து பொக்லைன் எந்திரங்கள் அகற்றப்பட்டது. இது குறித்து இந்து அமைப்பினர் கூறுகையில், ''கோவிலுக்கு சொந்தமான இடத்தின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது வரவேற்கத்தக்கது. ஆனால் பழமையான மடத்தை அதிகாரிகள் எந்தவித அறிவிப்பும் இல்லாமல் இடித்து உள்ளனர். இதனை இடிப்பதற்கான என்ன. காரணம் என்பது குறித்து அதிகாரிகள் எந்தவித பதிலும் தெரிவிக்கவில்லை. இதனை கண்டித்து அம்மணி அம்மன் கோபுரம் அருகில் இன்று (ஞாயளிற்றுக்கிழமை) காலை 10 மணியளவில் போராட்டம் நடைபெறும் என்றனர்.

இது குறித்து கோவில் இணை ஆணையர் குமரேசனிடம் கேட்ட போது, ''கோர்ட்டு உத்தரவின் படி ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. அம்மணி அம்மன் மடம் மிகவும் பழமை வாய்ந்தது. இடிந்து விழும் நிலையில் காணப்பட்டது. ஆட்கள் இருக்கும் போது இடிந்து அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கவும், இந்த இடத்தை புனரமைத்து கோவில் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்காகவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது'' என்றார்.

அம்மணி அம்மன் என பெயர் வந்தது எப்படி?

அம்மணி அம்மாள் என்பவர் திருவண்ணாமலையில் வாழ்ந்த பெண் சித்தராவார். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலின் வடக்கு கோபுரம் பாதி மட்டுமே கட்டப்பட்ட நிலையில் இருந்ததை கண்டு அதனை கட்ட எண்ணம் கொண்டார். இதற்காக பக்தர்கள், செல்வந்தர்களின் உதவியை நாடி கோபுரத்தினை கட்டி முடித்தார். அதனால் அருணாசலேஸ்வரர் கோவிலின் வடக்கு கோபுரம் அவரது பெயராலாயே அம்மணி அம்மன் கோபுரம் என்று அழைக்கப்படுகிறது. இவர் 17-ம் நூற்றாண்டின் இறுதியில் ஜீவ சமாதியடைந்தார். இவரது சமாதி ஈசான்ய லிங்க சன்னதிக்கு எதிரில் அமைந்து உள்ளது. இவரது பெயரில் வடக்கு கோபுரத்தின் அருகில் மடம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மடம் சுமார் 400 ஆண்டுகள் பழமையானது என்று கூறப்படுகிறது/


Next Story