அதிக கட்டணம் கேட்டு அடம் பிடிக்கும் ஆம்புலன்ஸ் டிரைவர்கள்


அதிக கட்டணம் கேட்டு அடம் பிடிக்கும்  ஆம்புலன்ஸ் டிரைவர்கள்
x
திருப்பூர்


துக்க நிகழ்வில் கூடுதல் கட்டணம் கேட்டு ஆம்புலன்ஸ் டிரைவர்கள் அடம் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கூடுதல் கட்டணம்

அவசர கால உதவி மற்றும் விபத்துகளில் சிக்கும் நபர்களை மீட்டு உயிரை காக்கும் உன்னத பணியை ஆம்புலன்ஸ் வாகனங்கள் செய்து வருகிறது. இதற்காக உயிரை பணயம் வைத்து வாகனங்களை இயக்கும் டிரைவர்களின் பணியை வார்த்தைகளால் விவரிக்க இயலாது உணர்வுப் பூர்வமாக மட்டுமே உணர முடியும்.

ஆனால் உடுமலை பகுதியில் ஒரு சில ஆம்புலன்ஸ் வாகனங்களின் டிரைவர்கள் விபத்து, துக்க நிகழ்வுகள் மற்றும் அவசரகால உதவிகளை அளிப்பதில் கூடுதல் கட்டணம் கேட்டு பொதுமக்களை வற்புறுத்தி வருகின்றனர். இதனால் பேரிழப்பை சந்தித்த பொதுமக்கள் மன வேதனைக்கு ஆளாகும் சூழலுக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

விபத்து

உயிரை காப்பாற்ற ஒலியை எழுப்பிக்கொண்டு அசுர வேகத்தில் செல்லும் ஆம்புலன்ஸ் வாகனத்தின் மீது அனைவருக்கும் தனிப்பட்ட மரியாதை உண்டு. ஆனால் அதை சாதகமாகக் கொண்டு உடுமலையில் உள்ள ஆம்புலன்ஸ் வாகனங்களின் டிரைவர்கள் அதிகப்படியான தொகையை கேட்டு பொதுமக்களை வற்புறுத்தி வருவது வேதனை அளிக்கிறது.

நேற்றுமுன்தினம் உடுமலை தாலுகா குடிமங்கலம் காவல் சரகத்திற்கு உட்பட்ட சுங்காரமுடக்கு பகுதியில் ஆம்னி வேனும் டிப்பர்லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இந்த விபத்தில் தாய் பலத்த காயம் அடைந்தார். 2 மகன்கள் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டனர்.

எரிகிற வீட்டில் பிடுங்கும் வரை லாபம்

இதுகுறித்து தகவல் அறிந்த ஆம்புலன்ஸ் வாகனங்கள் மின்னல் வேகத்தில் சென்று அவர்களை மீட்டு உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்து சேர்த்தது. வரும் வழியிலேயே காயமடைந்த தாயும் பலியாகி விட்டார்.ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலியானதை தாங்கிக்கொள்ள முடியாமல் அவர்களது குடும்பத்தினரும் உறவினர்களும் கதறி அழுதபடி இருந்தனர்.

இந்த சூழலில் எரிகிற வீட்டில் பிடுங்கும் வரை லாபம் என்பது போல் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் எதைப் பற்றியும் சிந்திக்காமல் அதிகப்படியான கட்டணத்தை கேட்டு அவர்களிடம் வாக்குவாதம் செய்தனர். டிரைவர்களின் மனிதாபிமானமற்ற செயலானது அங்கு கூடியிருந்த பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

முறையாகஅதிக கட்டணம் கேட்டு அடம் பிடிக்கும்

ஆம்புலன்ஸ் டிரைவர்கள் ஆய்வு செய்து

ஒரு வழியாக போலீசார் தலையிட்டு இந்த பிரச்சினைக்கு தீர்வு கண்டனர். இதே போன்று ஒரே விபத்திற்கு பல வாகனங்கள் அணிவகுத்து செல்வதும் திரும்பி வந்து பாதிக்கப்பட்ட நபர்களிடம் அனைத்து வாகனங்களும் கட்டணம் கேட்டு அடாவடித்தனம் செய்வதும் தொடர்கதையாக உள்ளது. ஒரு சிலர் செய்யும் தவறுகளால் மொத்த ஆம்புலன்ஸ் வாகனங்கள் மீது பொதுமக்கள் வைத்துள்ள நம்பிக்கை, மரியாதை சிதைந்து வருகிறது.

எனவே உடுமலை பகுதியில் இயக்கப்படுகின்ற ஆம்புலன்ஸ் வாகனங்களை அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்து அவற்றுக்கு கட்டணம் நிர்ணயம் செய்வதற்கு முன்வர வேண்டும். இதனால் இழப்பை சந்தித்த நபர்கள் மேலும் மனவேதனைக்கு ஆளாவது தடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.


Next Story