துண்டிக்கப்பட்ட விரலை ஒட்டவைத்து சாதனை


துண்டிக்கப்பட்ட விரலை ஒட்டவைத்து சாதனை
x
தினத்தந்தி 27 Aug 2023 2:30 AM IST (Updated: 27 Aug 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் விரல் துண்டித்த சிறுவனுக்கு ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து டாக்டர்கள் உள்ளிட்ட மருத்துவக்குழுவிற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் விரல் துண்டித்த சிறுவனுக்கு ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து டாக்டர்கள் உள்ளிட்ட மருத்துவக்குழுவிற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

சிறுவன் விரல் துண்டிப்பு

கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த தம்பதியான சாகர்-காசிபாய் ஆகியோர் பொள்ளாச்சி அருகே தென்குமாரபாளையத்தில் உள்ள கோழிப்பண்ணையில் தங்கியிருந்து வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுடைய 3 வயது குழந்தை கடந்த 23-ந் தேதி விளையாடும் போது கார் கழுவும் எந்திரத்தில் கையை வைத்துள்ளான். இதில் சிறுவனின் கைவிரல் துண்டானது.

இதையடுத்து சிறுவனையும், துண்டான விரலையும் எடுத்துக்கொண்டு சுமார் 1½ மணி நேரத்தில் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர். இதுகுறித்து கோவை மாவட்ட பொது சுகாதாரத்துறை இணை இயக்குனர் டாக்டர் மீராவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் டாக்டர் ராஜா தலைமையில் அறுவை சிகிச்சை துறை தலைவர் டாக்டர் கார்த்திகேயன், ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சங்கமித்ரா ஆகியோர் தொடர்ச்சியாக 8 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து துண்டான விரலை ஒட்ட வைத்தனர்.

இந்த சிகிச்சையில் அறுவை சிகிச்சை துறை பட்ட மேற்படிப்பு மாணவி டாக்டர் மணிமேகலை, மயக்க மருந்து நிபுணர்கள் டாக்டர் அருள், மணி, டாக்டர் கிருத்திகா, எலும்பு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் இசக்கி முருகன், குழந்தைகள் நல மருத்துவர்கள் டாக்டர் சிவசங்கர், டாக்டர் அமுதா, செவிலியர்கள் செல்வி, ஜெயலலிதா ஆகியோர் ஈடுபட்டனர்.

மருத்துவ குழுவிற்கு பாராட்டு

இதுகுறித்து அரசு ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் டாக்டர் ராஜா கூறியதாவது:-

சிறுவனுக்கு விரல் துண்டாகி காலதாமதமாகவே அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர். மேலும் இங்கிருந்து கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு செல்ல நேரம் ஆகும் என்பதால், இங்கேயே அறுவை சிகிச்சை செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. முதலில் கே ஒயர் மூலம் விரலை இணைத்த பிறகு, ரத்தக்குழாய்களும் படிப்படியாக இணைக்கப்பட்டது. சிறுவனின் கட்டைவிரல் எப்படி நல்ல நிலைக்கு திரும்புகிறது என்று ஒரு வாரம் கழித்து மீண்டும் பரிசோதனை செய்யப்படும். தற்போது சிறுவன் நல்ல நிலையில் உள்ளான்.

ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சைக்கு தேவையான மைக்ரோஸ்கோப் கருவி ஆஸ்பத்திரியில் இல்லை. இந்த கருவி இருந்தால் தான் ரத்த குழாய்களை இணைக்க முடியும். இதனால் கண் அறுவை சிகிச்சைக்கு பயன்படும் மைக்ரோஸ்கோப் கருவியை பயன்படுத்தி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த அறுவை சிகிச்சை தேசிய கை அறுவை சிகிச்சை தினமான கடந்த 23-ந்தேதி செய்யப்பட்டது. மேலும் இதுபோன்ற அறுவை சிகிச்சை பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் முதன் முறையாக மேற்கொள்ளப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிலையில் அரசு ஆஸ்பத்திரியில் ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை செய்த டாக்டர்கள் உள்ளிட்ட மருத்துவ குழுவினரை பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. நேற்று சந்தித்து பாராட்டு தெரிவித்தார். மேலும் பொதுமக்களும் மருத்துவ குழுவினரை பாராட்டி வருகின்றனர்.


Next Story