அமிர்தா எக்ஸ்பிரசை கோவை வழியாக இயக்க வேண்டும் ரெயில்வே ஆர்வலர்கள் வலியுறுத்தல்
மதுரை-திருவனந்தபுரம் இடையே இயக்கப்படும் அமிர்தா எக்ஸ்பிரசை கோவை வழியாக இயக்க வேண்டும் என்று ரெயில்வே ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
பொள்ளாச்சி
மதுரை-திருவனந்தபுரம் இடையே இயக்கப்படும் அமிர்தா எக்ஸ்பிரசை கோவை வழியாக இயக்க வேண்டும் என்று ரெயில்வே ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
அமிர்தா எக்ஸ்பிரஸ்
திருவனந்தபுரத்தில் இருந்து பொள்ளாச்சி வழியாக மதுரைக்கு அமிர்தா எக்ஸ்பிரஸ் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் சென்ற ஒரு மணி நேரத்தில் அதே வழித்தடத்தில் பாலக்காட்டில் இருந்து திருச்செந்தூருக்கு ரெயில் இயக்கப்படுகிறது. அமிர்தா எக்ஸ்பிரஸ் பாலக்காடு நகரம், கொல்லங்கோட்டிற்கு பிறகு பொள்ளாச்சியில் தான் நிறுத்தப்படுகிறது. இதனால் இந்த ரெயிலில் குறைவான பயணிகளே பயணம் செய்கின்றனர்.
இதன் காரணமாக இந்த ரெயிலை பாலக்காட்டில் இருந்து கோவை, பொள்ளாச்சி வழியாக மதுரைக்கு இயக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் தென்னக ரெயில்வே பொதுமேலாளருக்கும் கோரிக்கை மனு அனுப்பப்பட்டு உள்ளது.
இதுகுறித்து ரெயில்வே ஆர்வலர்கள் கூறியதாவது:-
கோவை வழியாக இயக்க வேண்டும்
திருவனந்தபுரத்தில் இருந்து பாலக்காடு வரை இயக்கப்பட்ட அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயில், பின்னர் பொள்ளாச்சி மற்றும் மதுரை வரை நீட்டிப்பு செய்யப்பட்டது. இந்த ரெயில் பாலக்காடு நகரம், கொல்லங்கோட்டிற்கு பிறகு பொள்ளாச்சி வரைக்கும் வேறு எந்த ரெயில் நிலையத்திலும் நிற்பதில்லை. இதற்கிடையில் இதே வழித்தடத்தில் திருச்செந்தூர் ரெயில் இயக்கப்படுவதால் அமிர்தா எக்ஸ்பிரசில் குறைவான பயணிகளே பயணம் செய்கின்றனர்.
எனவே இந்த ரெயிலை கோவை வழியாக இயக்கினால் மேலும் பயணிகளுக்கு வசதியாக இருக்கும். மேலும் திருவனந்தபுரம், தெற்கு கேரளாவில் இருந்து பயணம் செய்யும் பயணிகள் ஒரே இரவில் கோவைக்கு வந்து சேர முடியும். மேலும் கோவையில் இருந்து பழனி, மதுரைக்கு செல்லும் பயணிகள் இந்த ரெயிலை பயன்படுத்தி கொள்ள வசதியாக இருக்கும். இதேபோன்று கோவையில் இருந்து திருச்செந்தூர் செல்லும் பயணிகளும் இந்த ரெயிலில் பொள்ளாச்சிக்கு சென்று திருச்செந்தூர் ரெயில் சேவை பயன்படுத்தி கொள்ள வாய்ப்பாக அமையும்.
கூடுதல் வருவாய்
மேலும் கோவையில் இருந்து பொள்ளாச்சி வழியாக மதுரைக்கு செல்வதற்கு காலை நேரத்தில் ரெயில் இல்லை. அமிர்தா எக்ஸ்பிரஸ் கோவை வழியாக செல்வதன் மூலம் மதுரை மீனாட்சியம்மன், திருப்பரங்குன்றம், பழனி முருகன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும். மேற்கண்ட ரெயிலை கோவை வழியாக இயக்குவதால் கூடுதலாக 40 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கவும், தற்போதைய ரெயில்நேர அட்டவணையில் சிறிது மாற்றம் செய்ய வேண்டிய இருக்கும். கோவையில் உள்ள பயணிகளால் ஒரு மாதத்திற்கு குறைந்தபட்சம் ரூ.90 லட்சம் வரை கூடுதலாக வருவாய் கிடைக்க வாய்ப்பு உள்ளது.ஏற்கனவே மீட்டர் கேஜ் ரெயில் பாதையாக இருக்கும் போது கோவையில் இருந்து (வண்டி எண் 777) காலை 7.30 மணிக்கு மதுரைக்கு ரெயில் இயக்கப்பட்டது. இந்த ரெயிலுக்கு மாற்றாக ரெயில்வே நிர்வாகம் அமிர்தா எக்ஸ்பிரசை கோவை வழியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து போத்தனூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, பழனி, உடுமலை ஆகிய பகுதிகளை சேர்ந்த ரெயில் பயணிகள் சங்கத்தினர் ரெயில்வே நிர்வாகத்துக்கு மனு அனுப்பி உள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
கோவை வரை இயக்கப்பட்டு கேரளாவுக்கு நீட்டிக்கப்பட்ட ரெயில்கள்
சென்னை எழும்பூர்-கோவை தினசரி எக்ஸ்பிரஸ் ரெயில் மங்களூர் வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதேபோன்று திருச்சி-கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் பாலக்காடு வரையும், பெங்களூர்-கோவை இன்டர்சிட்டி ரெயில் எர்ணாகுளம் வரையும் நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதில் பெங்களூரில் இருந்து கோவை வரை இயக்கப்பட்ட ரெயில் எர்ணாகுளம் வரை நீட்டிக்கப்பட்ட போது, அமிர்தா எக்ஸ்பிரஸ் கோவை வரை நீட்டிக்க ஒப்புக்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அது நடக்கவில்லை. எனவே திருவனந்தபுரத்தில் இருந்து மதுரைக்கு இயக்கப்படும் அமிர்தா எக்ஸ்பிரசை கோவை, பொள்ளாச்சி வழியாக இயக்க வேண்டும் என்கிற கோரிக்கை நிறைவேற்ற வேண்டும் என்று ரெயில்வே ஆர்வலர்கள் தெரிவித்தனர்.