வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 8 வயது சிறுவன் சாவு
வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 8 வயது சிறுவன் சாவு
குடவாசல் அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 8 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
விளையாடினர்
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள தீபங்குடி தெற்கு தெருவை சேர்ந்தவர் ராஜசேகர். இவருடைய மனைவி சைலாதேவி. இவர்களுக்கு 8 வயதில் கணீஷ், 4 வயதில் கிஷாலி என்ற இரண்டு குழந்தைகள். இவர்களில் சிறுவன் கணீஷ், அந்த பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தான்.
இந்த நிலையில் ராஜசேகர் வீட்டின் கீற்று கொட்டகையை சீரமைக்கும் பணிகள் நடந்து வந்துள்ளது. வீ்ட்டின் கீற்று கொட்டகை பிரிக்கப்பட்டு இருந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் சிறுவன் கணீஷ் மற்றும் ராஜசேகரின் அண்ணன் முரளி என்பவரின் 5 வயது மகள் அகஸ்தியா ஆகியோர் விளையாடிக்கொண்டு இருந்தனர்.
சுவர் இடிந்து விழுந்து சிறுவன் சாவு
அப்போது கீற்று கொட்டகையின் மண் சுவர் திடீரென இடிந்து அங்கு விளையாடிக்கொண்டு இருந்த சிறுவன் கணீஷ் மற்றும் சிறுமி அகஸ்தியா ஆகிய இருவர் மீதும் விழுந்தது. இதில் இருவரும் இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயம் அடைந்தனர்.
உடனடியாக அவர்கள் இருவரையும் அவர்களது குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கணீஷ் பரிதாபமாக உயிரிழந்தான். சிறுமி அகஸ்தியாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து குடவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சோகம்
வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 8 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.