மின்கம்பிகள் உரசி தீப்பற்றியதில் ஒரு ஏக்கர் நெற்பயிர்கள் எரிந்து நாசம்


மின்கம்பிகள் உரசி தீப்பற்றியதில் ஒரு ஏக்கர் நெற்பயிர்கள் எரிந்து நாசம்
x

மின்கம்பிகள் உரசி தீப்பற்றியதில் ஒரு ஏக்கர் நெற்பயிர்கள் எரிந்து நாசமானது.

அரியலூர்

தா.பழூர்:

நெற்பயிர்கள்

அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள தென்கச்சிபெருமாள்நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவர் காரைக்குறிச்சி சவுந்தரநாயகி அம்மன் உடனுறை பசுபதீஸ்வரர் கோவிலில் அர்ச்சகராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு தென்கச்சிபெருமாள்நத்தம் பகுதியில் ஒரு ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இங்கு சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டு, தற்போது அறுவடைக்கு தயாராக இருந்தது. இந்நிலையில் நேற்று மாலை அப்பகுதியில் வயல்களுக்கு குறுக்கே செல்லும் மின் வழித்தடத்தில் மின் கம்பிகள் உரசி தீப்பொறி ஏற்பட்டுள்ளது. அந்த தீப்பொறிகள் வயலில் இருந்த காய்ந்த நெற்பயிரில் பட்டு திடீரென தீப்பற்றி எரிந்தன.

எரிந்து நாசம்

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த விவசாயிகள் தீயை அணைக்க முயன்றனர். அதற்குள் தீ மளமளவென பரவி அந்த வயல் முழுவதும் இருந்த நெற்பயிர்கள் முற்றிலும் எரிந்து கருகி நாசமாயின.

இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செல்வராஜ், தனது வயலில் எரிந்து கொண்டிருந்த நெற்பயிர்களை பார்த்து கதறி அழுதார். இதற்கிடையே அப்பகுதி மக்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். சிறிது நேரத்தில் தீ அணைந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story