ரெயில் மறியலில் ஈடுபட முயற்சி


ரெயில் மறியலில் ஈடுபட முயற்சி
x

காவிரி நீரை பெற்றுத்தராத மத்திய அரசை கண்டித்து தஞ்சையில் ரெயில் மறியல் செய்ய முயன்ற விவசாயிகள்- போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட காவிரி விவசாயிகள் சங்கத்தினர் 75 பேர் கைது செய்யப்பட்டனர்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்;

காவிரி நீரை பெற்றுத்தராத மத்திய அரசை கண்டித்து தஞ்சையில் ரெயில் மறியல் செய்ய முயன்ற விவசாயிகள்- போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட காவிரி விவசாயிகள் சங்கத்தினர் 75 பேர் கைது செய்யப்பட்டனர்.

ரெயில் மறியல் போராட்டம்

தஞ்சை மாவட்ட தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் காவிரி நீரை பெற்றுத்தராத மத்திய, அரசை கண்டித்து ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்தனர். அதன்படி தஞ்சையில் மாநில தலைவர் எல்.பழனியப்பன் தலைமையில் தெற்கு மாவட்ட செயலாளர் மணி, தலைவர் வீரப்பன், வடக்கு மாவட்ட தலைவர் செந்தில்குமார், செயலாளர் பாட்ஷாரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் விவசாயிகள் தஞ்சை தலைமை தபால் நிலையம் அருகே இருந்து ரெயில் நிலையம் நோக்கி ஊர்வலமாக வந்தனர்.ரெயில் நிலையம் அருகே வந்தபோது அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் இரும்பு தடுப்புகளை அமைத்து அவர்களை தடுத்தனர். அப்போது, கர்நாடகாவில் ஆற்றில் இறங்கி விவசாயிகள் போராட்டம் நடத்த அனுமதிக்கிறார்கள்.இங்கு ரெயில் மறியல் செய்ய அனுமதி மறுக்குறீர்களே? என விவசாயிகள் கோஷம் எழுப்பினர். அப்போது போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தரையில் அமர்ந்து கோஷம்

இதையடுத்து விவசாயிகள் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் கருகும் குறுவையையும், சம்பா சாகுபடியை தொடங்கிட கர்நாடகாவிடமிருந்து உரியத் தண்ணீரை மேலாண்மை ஆணையம் உத்தரவின் அடிப்படையில் பெற்றுத்தர வேண்டும். மேகதாது அணை கட்டுவதற்கு அனுமதிக்கக்கூடாது. ராசிமணலில் அணைகட்ட அனுமதி அளிக்க வேண்டும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் தன்னாட்சி அதிகாரத்துடனான செயல்பாட்டை முடக்கக்கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.இது குறித்து மாநில தலைவர் எல்.பழனியப்பன் கூறுகையில், டெல்டா மாவட்டங்களில் குறுவை பயிர்கள் கருகுகின்றன. காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும் என்ற மேலாண்மை ஆணைய உத்தரவை மதிக்காத கர்நாடக அரசை மத்தியஅரசு வலியுறுத்த வேண்டும். சம்பா சாகுபடியை தொடங்குவதற்கு உடனடியாக காவிரி தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு 3 ஆண்டுகளாக செயல்படுத்தாமல் உள்ள குறுவை காப்பீடு திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.என்றார். இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 75 விவசாயிகளை போலீசார் கைது செய்தனர். முன்னதாக ரெயில் நிலையத்திற்குள் சென்று தண்டவாளத்தில் அமரமுயன்ற 4 விவசாயிகளும் கைது செய்யப்பட்டனர்.


Next Story