ஆளில்லாத வீட்டில் ஜன்னல் கம்பியை வளைத்து திருட முயற்சி


ஆளில்லாத வீட்டில் ஜன்னல் கம்பியை வளைத்து திருட முயற்சி
x
தினத்தந்தி 22 Oct 2023 6:45 PM GMT (Updated: 22 Oct 2023 6:46 PM GMT)

தக்கலை அருகே ஆளில்லாத வீட்டில் ஜன்னல் கம்பியை வளைத்து திருட முயன்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

கன்னியாகுமரி

தக்கலை அருகே உள்ள முத்தலக்குறிச்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 60). இவருடைய மனைவி அம்பிகா. கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவன், மனைவி இருவரும் சென்னையில் உள்ள தனது மகனை பார்க்க புறப்பட்டு சென்றார். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் மதியம் அய்யப்பனின் வீட்டில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற அவரது சகோதரர் வேலப்பன் (73) என்பவர் அங்கு சென்றார்.

அப்போது வீட்டில் ஜன்னல் கண்ணாடி உடைந்திருந்தது. மேலும் ஜன்னல் கம்பியும் வளைந்த நிலையில் இருந்தது. இதனை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.

இதேபோல் மாடியின் வெளிப்புறத்தில் உள்ள ஜன்னல் கம்பியும் வளைந்திருந்தது. இதுகுறித்து அவர் தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். உடனே போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டனர்.

வீட்டில் ஆளில்லாததை நோட்டமிட்ட மர்மஆசாமிகள் ஜன்னல் கம்பியை வளைத்து வீட்டுக்குள் உள்ளே நுழைய முயன்றுள்ளனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. பெரிய அளவில் ஜன்னல் கம்பியை வளைக்க முடியாததால் தங்களுடைய கொள்ளை திட்டம் தோல்வியடைந்த நிலையில் சென்றிருக்கலாம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. அதேபோல் வீட்டிற்குள் திருடு போனதற்கான அறிகுறியும் இல்லை.

இதனை தொடர்ந்து தடயவியல் நிபுணர்கள் வீட்டுக்கு வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகியிருந்த கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன. இதுதவிர அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மஆசாமிகளை தேடிவருகின்றனர்.


Next Story