நள்ளிரவு பூஜைக்காக காளி கோவிலுக்கு வந்த சாமியாரை கொலை செய்ய முயற்சி
செஞ்சி அருகே நள்ளிரவு பூஜை செய்வதற்காக காளி கோவிலுக்கு வந்த சாமியாரை கத்தியால் குத்தி கொல்ல முயன்ற மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
செஞ்சி:
செஞ்சி அருகே பெருங்காப்பூரில் காளி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் இரவில் பக்தர்கள் வழிபடுவது வழக்கம். அவ்வாறு வரும் பக்தர்களுக்கு சில சாமியார்கள் குறி சொல்லி வந்துள்ளனர். இதனால் இந்த கோவிலில் நள்ளிரவிலும் பூஜை நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்டம் அடராப்பட்டு கிராமத்தில் குறி சொல்லும் மையம் நடத்தி வந்த இஸ்தானந்தா என்ற சரவணன்(வயது 42) என்ற சாமியாரும் அடிக்கடி காளி கோவிலுக்கு வந்து குறி சொல்லி வந்துள்ளார்.
வயிற்றில் கத்திக்குத்து
இந்த நிலையில் சாமியார் சரவணன் குறி சொல்வதற்காகவும், நள்ளிரவு பூஜை நடத்துவதற்காகவும் நேற்று முன்தினம் இரவு காளி அம்மன் கோவிலுக்கு வந்தார். இரவு 10 மணி வரை பக்தர்களுக்கு சாமியார் குறி சொல்லி உள்ளார். அதன்பிறகு நள்ளிரவு பூஜைக்காக சாமியார் தயாரானார்.
நள்ளிரவில் அருகில் உள்ள மாந்தோப்புக்கு சென்ற சாமியார் சரவணனை, அங்கு மறைந்திருந்த மர்மநபர் ஒருவர் திடீரென கத்தியால் வயிற்றில் குத்தி கிழித்துவிட்டு தப்பி ஓடிவிட்டார் வலி தாங்க முடியாமல் அலறிய சாமியாரின் அலறலை கேட்டு, கோவிலில் இருந்தவர்கள் ஓடிவந்தனர். அங்கு ரத்த வெள்ளத்தில் சாமியார் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.
தீவிர சிகிச்சை
இதுகுறித்து உடனடியாக சத்தியமங்கலம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று சாமியார் சரவணனை மீட்டு சிகிச்சைக்காக செஞ்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மர்மநபருக்கு வலைவீச்சு
இது குறித்து பெருங்காப்பூர் கிராம நிர்வாக அலுவலர் வெற்றி கொண்டான் சத்தியமங்கலம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சாமியாரை கத்தியால் குத்திக் கொலை செய்ய முயன்ற மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.
நள்ளிரவு பூஜைக்காக வந்த சாமியாரை மர்மநபர் கத்தியால் குத்திக் கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.