விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட ஆட்டோ டிரைவர் ஆசிட் குடித்ததால் பரபரப்பு
திருவண்ணாமலை கலால் போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட ஆட்டோ டிரைவர் ஆசிட் குடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை கலால் போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட ஆட்டோ டிரைவர் ஆசிட் குடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆட்டோ டிரைவர்
திருவண்ணாமலை தியாகி அண்ணாமலை நகரை சேர்ந்த சிவப்பிரகாஷ் (வயது 32), ஆட்டோ டிரைவர். இவரது மனைவி இலக்கியா. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
சிவப்பிரகாஷ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. தற்போது அவர் சாராய விற்பனையில் ஈடுபடாமல் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று மாவட்ட தனிப்படை போலீசார் சிவப்பிரகாசை சாராய விற்பனை குறித்து விசாரணை செய்ய வேண்டுமென அவரது வீட்டில் இருந்து திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள கலால் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து உள்ளனர்.
அப்போது அவர் மீது கலால் போலீசார் சாராய விற்பனை தொடர்பான வழக்குப்பதிவு செய்ய போவதாக கூறியதாக தெரிகிறது.
ஆசிட்டை குடித்தார்
இதனால் வேதனை அடைந்த அவர் கழிவறை சென்று வருவதாக கூறிவிட்டு அங்கு சென்று கழிவறையில் இருந்த ஆசிட்டை எடுத்து குடித்து உள்ளார்.
இதில் எரிச்சல் தாங்காமல் கூச்சலிட்டார். இதையடுத்து சிவப்பிரகாசை போலீசார் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
தொடர்ந்து உடல் நல பாதிப்பு ஏற்பட்டதால் அவர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். இதுகுறித்து திருவண்ணாமலை கிழக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தினால் திருவண்ணாமலையில் பரபரப்பு ஏற்பட்டது.