நாணயங்கள், வளையல்களில் 1330 திருக்குறள்களை எழுதிவிருதுகள் பெற்ற தமிழ் ஆசிரியை
ஆரணியை சேர்ந்த தமிழாசிரியை வளையல்கள், அகல்விளக்குகளில் திருக்குறள்களை எழுதி புத்தகங்களை வெளியிட்டு விருதுகளை பெற்றுள்ளார். அவரை தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நேரில் அழைத்து பாராட்டினார்.
ஆரணி
ஆரணியை சேர்ந்த தமிழாசிரியை வளையல்கள், அகல்விளக்குகளில் திருக்குறள்களை எழுதி புத்தகங்களை வெளியிட்டு விருதுகளை பெற்றுள்ளார். அவரை தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நேரில் அழைத்து பாராட்டினார்.
தமிழ் ஆசிரியை
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள ஒருங்கிணைந்த வி.ஏ.கே.நகர் பகுதியை சேர்ந்தவர் உமாராணி (வயது 52). இவர் எஸ்.வி.நகரம் ஊராட்சியில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
கடந்த 25 ஆண்டுகளாக ஆசிரியையாக பணியாற்றி வரும் இவர், தமிழ் மீது அதிக ஆர்வம் கொண்டுள்ளார்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா விடுமுறையில் சிறு சிறு சாதனை முயற்சிகளை மேற்கொண்டார்.
தமிழ் வளர்ச்சி பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் அப்போது அவர் திருக்குறளில் உள்ள 1330 குறள்களை நாணயங்கள், வளையல், குடை, சோயா பீன்ஸ், அகல் விளக்கு, பாசிமணி உள்ளிட்ட பொருட்களில் எழுதி அதனை கவிதை திறன் மூலம் புத்தகங்களும் எழுதி சாதனை படைத்துள்ளார்.
இது சம்பந்தமாக 'ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' உலக சாதனைக்கு அனுப்பப்பட்டது.
இதனையொட்டி முத்தமிழ் அறிஞர் சங்கம், ஆரணி லயன்ஸ் சங்கம், சில்க் சிட்டி லயன்ஸ் சங்கம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் மூலமாக ஆசிரியை உமாராணி சாதனை விருதுகள் பெற்றுள்ளார்.
இதையறிந்த தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஆசிரியை உமாராணியை அழைத்து திருக்குறள் சாதனையாளர் என பாராட்டி சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
சாதனை பயணம் தொடரும்
இதுகுறித்து ஆசிரியை உமாராணி கூறுகையில், ''திருக்குறளை தேசிய நூலாக அரசு அறிவிக்க வேண்டும், வாழ்க்கையின் அனைத்து நெறிமுறைகளும் திருக்குறளில் அடங்கியுள்ளது.
அதனை பின்பற்றினாலே மனிதன் நல்ல மனிதனாக வாழ முடியும். எனது சாதனைப் பயணம் தொடரும்'' என்றார்.