விழிப்புணர்வு சைக்கிள் பயணம் மேற்கொள்ளும்ஆந்திர வாலிபருக்கு கலெக்டர் பாராட்டு
சைக்கிளில் விழிப்புணர்வு பயணம் மேற்கொள்ளும் ஆந்திர வாலிபரை தேனி கலெக்டா் பாராட்டினார்.
ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்தவர் பஞ்சல சைதன்யா (வயது 26). இவர் மருந்தாளுனர் படிப்பு படித்துள்ளார். இவர், பாலித்தீன் பயன்பாட்டால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவது குறித்தும், பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாட்டில் சுமார் 50 ஆயிரம் கிலோமீட்டர் சைக்கிளில் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டார். அதன்படி, கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஆந்திராவில் இருந்து புறப்பட்ட அவர் 106-வது நாள் பயணமாக நேற்று முன்தினம் திண்டுக்கல் வழியாக தேனிக்கு வந்தார். தேனியில் ஆர்ய வைஸ்ய மகாசபை மாநில தலைவர் ராஜேஷ் குப்தா தலைமையில் நிர்வாகிகள், சைக்கிளில் விழிப்புணர்வு பயணம் வந்த பஞ்சல சைதன்யாவுக்கு வரவேற்பு கொடுத்தனர். பின்னர் அவர்கள் பஞ்சல வைதன்யாவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு இந்த விழிப்புணர்வு பயணம் மேற்கொண்ட விவரத்தை அறிந்த கலெக்டர் ஷஜீவனா, சிறுதானிய உணவு வகைகளை வழங்கி அவருக்கு பாராட்டு தெரிவித்தார். பின்னர் அவர் நேற்று காலையில் தேனியில் இருந்து மதுரைக்கு புறப்பட்டுச் சென்றார்.