ஆண்களுக்கான நவீன கருத்தடை பற்றிய விழிப்புணர்வு வாகனம்
கடலூரில் ஆண்களுக்கான நவீன கருத்தடை பற்றிய விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் பாலசுப்பிரமணியம் தொடங்கி வைத்தார்.
கடலூர்,
கடலூர் மாவட்ட குடும்ப நலத்துறை சார்பில் நவீன தழும்பில்லா ஆண் கருத்தடை சிகிக்சையை ஊக்குவிக்கும் வகையில், பொதுமக்களுக்கு இது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் ரமேஷ்பாபு, கண்காணிப்பாளர் நடராஜன், குடும்ப நலம் துணை இயக்குனர் (பொறுப்பு) பரிமேலழகர், நிலைய மருத்துவ அலுவலர் பாலகுமாரன், தேசிய சுகாதார திட்ட அலுவலர் காரல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் மாவட்ட தாய், சேய் நல அலுவலர் சசிகலா, செவிலியர் கல்லூரி முதல்வர் மலர்விழி, வட்டார சுகாதார புள்ளியியலாளர் ரத்தினவேலு மற்றும் அலுவலர்கள், செவிலியர் பயிற்சி மாணவிகள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட மக்கள் கல்வி அலுவலர் (பொறுப்பு) அரவிந்தபாபு செய்திருந்தார். இந்த விழிப்புணர்வு வாகனம் மூலம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களுக்கும் சென்று அடுத்த மாதம் (டிசம்பர்) 4-ந்தேதி வரை பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.