ஒரே சேலையில் தூக்குப்போட்டு வயதான தம்பதி தற்கொலை


ஒரே சேலையில் தூக்குப்போட்டு வயதான தம்பதி தற்கொலை
x

பெரம்பலூர் அருகே ஒரே சேலையில் தூக்குப்போட்டு வயதான தம்பதி தற்கொலை செய்து கொண்டனர். ‘

பெரம்பலூர்

புற்றுநோயால் பாதிப்பு

பெரம்பலூர் மாவட்டம், லாடபுரம் 1-வது வார்டு, நடுத்தெருவை சேர்ந்தவர் தியாகராஜன்(வயது 78). இவரது மனைவி பானுமதி (72). இவர்களுக்கு கதிரேசன் என்ற மகனும், கவிதா என்ற மகளும் உள்ளனர். கதிரேசன் திருமணமாகி குடும்பத்தினருடன் சேலம் மாவட்டம், உலிபுரம் கிராமத்தில் வசித்து வருகிறார். கவிதா பெரம்பலூர் மாவட்டம், அ.மேட்டூரில் சின்னசாமி என்பவருடன் திருமணமாகி குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இதனால் லாடபுரம் வீட்டில் தியாகராஜனும், பானுமதியும் வசித்து வந்தனர். மேலும் அவர்கள் வீட்டின் அருகே பெட்டிக்கடை வைத்து பிழைப்பு நடத்தி வந்தனர். இந்த நிலையில் பானுமதி புற்று நோயால் பாதிக்கப்பட்டார். அதற்காக கடந்த 6 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் 9 மணிக்கு தியாகராஜனும், பானுமதியும் வீட்டில் தூங்க சென்றனர். அதிகாலையிலேயே தியாகராஜன் எழுந்து விடுவது வழக்கம். ஆனால் நேற்று அதிகாலை 5.45 மணி வரை தியாகராஜன் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் தியாகராஜன் வீட்டிற்கு சென்றனர்.

தூக்கில் தொங்கினர்

அப்போது வீட்டின் கதவு உள்புறம் தாழ்ப்பாள் போடப்படாமல் இருந்தது. இதனால் அவர்கள் கதவை திறந்து பார்த்தனர். அப்போது வீட்டின் உள்ளே மின் விசிறி கொக்கியில் தியாகராஜனும், பானுமதியும் ஒரே சேலையில் தூக்கில் தொங்கிக்கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சல் போட்டனர். சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து தூக்கில் தொங்கியவர்களை மீட்டனர். இதையடுத்து இதுகுறித்து அவர்களது மகன், மகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களும் விரைந்து வந்து பெற்றோரின் உடல்களை பார்த்து கதறி அழுதது காண்போரை கண்கலங்க செய்தது.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த பெரம்பலூர் சரக போலீஸ் துணை சூப்பிரண்டு பழனிசாமி தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து தியாகராஜன், பானுமதியின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தியாகராஜனும், பானுமதியும் மிகவும் அன்புடனும், பாசத்துடனும் வாழ்ந்து வந்தனர். பானுமதி புற்றுநோயால் பாதிக்கப்பட்டதில் இருந்து தியாகராஜன் மிகவும் கவலையுடன் இருந்து வந்தார். மேலும் பானுமதி கடந்த 15 நாட்களாக புற்று நோயால் மிகவும் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

நோயின் கொடுமையை...

நோயின் கொடுமையை பானுமதியால் தாங்க முடியாததை கண்டு தியாகராஜன் வேதனை அடைந்தார். இதனால் அவர்கள் 2 பேரும் இந்த தற்கொலை முடிவை எடுத்திருக்கலாம் என்று போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. சாவிலும் இணை பிரியாமல் வயதான தம்பதி ஒரே சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்து தியாகராஜன், பானுமதி ஆகியோரின் உடல்கள் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் கணவன்-மனைவி இருவரின் உடல்களையும் உறவினர்கள் தகனம் செய்தனர்.


Next Story