எடப்பாடியில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு உரிமையாளர் அலறியடித்து ஓட்டம்
எடப்பாடியில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் திடீரென தீப்பற்றி எரிந்ததால் அதன் உரிமையாளர் அலறியடித்து ஓட்டம் பிடித்தார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
எடப்பாடி,
எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
சேலம் மாவட்டம், எடப்பாடி நகராட்சி வெள்ளாண்டி வலசு, அம்மன் நகர் 2-வது வீதியை சேர்ந்தவர் வரதராஜன் (வயது 29), தனியார் நிறுவன ஊழியர். இவர் கடந்த 14 மாதங்களுக்கு முன்பு ஈரோடு பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஒரு எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கி பயன்படுத்தி வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை தனது எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு சார்ஜ் செய்ய மின் இணைப்பு கொடுத்துள்ளார். தொடர்ந்து சிறிது நேரத்திற்கு பிறகு மின் இணைப்பை துண்டித்த வரதராஜன், வெளியில் செல்வதற்காக எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வீட்டுக்கு வெளியில் எடுத்து வந்து அதை இயக்க முயன்றார்.
தீயில் எரிந்து சாம்பல்
அப்போது அந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. அதிவேகமாக பரவிய தீயால் வாகனம் முழுவதும் தீப்பற்றி கொழுந்து விட்டு எரிய தொடங்கியது.
இதனால் அதிர்ச்சியடைந்த வரதராஜன் தீப்பற்றி எரிந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அப்படியே போட்டுவிட்டு தப்பி ஓடினார். பின்னர். அருகில் இருந்தவர்கள் எடப்பாடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் பற்றி எரிந்த தீயை போராடி அணைத்தனர். அதற்குள் வாகனம் முழுவதும் எரிந்து சாம்பலானது.
திடீரென எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் ஏற்கனவே எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பயன்படுத்தி வருபவர்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.