விபத்தில் காயமடைந்த தனியார் நிறுவன ஊழியர் சாவு
விபத்தில் காயமடைந்த தனியார் நிறுவன ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி காமராஜ்நகரை சேர்ந்தவர் பெருமாள். இவரின் மகன் மணிகண்டன் (வயது 23). இவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் ஏற்றுமதி-இறக்குமதி நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 10-ந்தேதி வேலை விஷயமாக மோட்டார் சைக்கிளில் நெல்லை டக்கரம்மாள்புரத்துக்கு வந்தார். அவரின் நண்பரான தூத்துக்குடி திரு.வி.க. நகரை சேர்ந்த கன்னியராஜ் மோட்டார் சைக்கிளை ஓட்டினார். மணிகண்டன் பின்னால் அமர்ந்து இருந்தார்.
அன்று இரவு அவர்கள் வேலையை முடித்துவிட்டு கன்னியாகுமரி- மதுரை நான்குவழி சாலையில் நெல்லை அருகே அணுகு சாலையில் சென்ற போது பின்னால் அமர்ந்து இருந்த மணிகண்டன் திடீரென கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அவர் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் நேற்று காலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிர் இழந்தார். இதுகுறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.