சேலத்தில் பரபரப்பு: டிரான்ஸ்பார்மரில் மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிய ஊழியர்பஸ்சை நிறுத்தி விட்டு ஓடி வந்து காப்பாற்றிய டிரைவர்
சேலம்
சேலத்தில் டிரான்ஸ்பார்மரில் மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிய ஊழியரை, அந்த வழியாக தனியார் பஸ்சை ஓட்டி வந்த டிரைவர், பஸ்சை நிறுத்திவிட்டு ஓடி வந்து காப்பாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மின்சாரம் தாக்கியது
சேலத்தில் ஓமலூர் சாலையில், சீதாராமன் செட்டி பிரிவு சாலை அருகே டிரான்ஸ்பார்மர் (மின்மாற்றி) ஒன்று உள்ளது. இதில் ஏற்பட்ட பழுதை சரிபார்க்கும் பணிக்காக, லைன் மேன் சரவணன் நேற்று மாலை தனது மோட்டார் சைக்கிளில் வந்தார்.
அவர் அந்த டிரான்ஸ்பார்மருக்கான மின் இணைப்பை துண்டிக்கும் வகையில் தான் வைத்திருந்த கம்பியால் திருகி விட்டு டிரான்ஸ்பார்மரின் மேலே சென்று மின் சாதன பழுதை சரிபார்க்க தொடங்கினார். ஆனால் டிரான்ஸ்பார்மரில் மின் இணைப்பு சரியாக துண்டிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனால் அந்த டிரான்ஸ்பார்மரில் வேலை செய்து கொண்டிருந்த ஊழியர் சரவணன் மின்சாரம் தாக்கி மேலே இருந்த தாங்கு கம்பியில் இருந்து அதற்கு கீழே உள்ள கம்பியில் தவறிவிழுந்து உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார்.
மின் இணைப்பு துண்டிப்பு
இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். குறிப்பாக அந்த பகுதி யில் வசிக்கும் பெண்கள் செய்வதறியாது திகைத்து நின்று கதறி அழுதனர். இதனிடையே ஆத்தூரில் இருந்து தனியார் பஸ் ஒன்றை ஓட்டி வந்த டிரைவர் கண்ணன், பெண்கள் கூட்டமாக நிற்பதை பார்த்து வண்டியை நிறுத்தி விட்டு கண்ணாடி வழியாக கீழே குனிந்து டிரான்ஸ்பார்மரை பாா்த்தார்.
அப்போது தான் மின்சாரம் தாக்கி ஊழியர் ஒருவர் உயிருக்கு போராடுவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் தனது வண்டியில் இருந்த இரும்பு ராடை (லிவர்) எடுத்துக்கொண்டு அங்கு ஓடி வந்து டிரான்ஸ்பார்மர் மின் இணைப்பை துண்டிக்க முயன்றார். அதில் அந்த லிவர் சரியாக பொருந்தவில்லை. உடனே அவர் மின் ஊழியரின் மோட்டார் சைக்கிளில் இருந்த கம்பியை எடுத்து டிரான்ஸ்பார்மருக்கான மின் இணைப்பை உடனடியாக நிறுத்தினார்.
உயிர் தப்பினார்
கண நேரத்தில் நடந்து முடிந்த இந்த நிகழ்வில், மின்சார ஊழியர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அதே நேரத்தில் ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அங்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கயிறு கட்டி அவரை இறக்கி அருகில் இருந்த தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
அதே நேரத்தில் ஆம்புலன்சில் மின்சார ஊழியர் அனுப்பி வைக்கப்பட்டவுடன், தனியார் பஸ் டிரைவர் அங்கிருந்து சேலம் புதிய பஸ் நிலையத்துக்கு பஸ்சை ஓட்டிச்சென்றார்.
டிரைவர் பேட்டி
பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து டிரைவர் கண்ணனிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-
தலைவாசல் அருகே மணிவிழுந்தான் வடக்கு புதுத்தெருவை சேர்ந்த நான் ஆத்தூரில் இருந்து சேலம் வரும் தனியார் பஸ்சை ஓட்டி வருகிறேன். நேற்று மாலை அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லும் பயணிகளை இறக்கி விட்டு விட்டு, ரெயில்வே மேம்பாலத்தின் கீழே ஓமலூர் சாலையில் பஸ்சை திருப்பினேன். அப்போது தான் பெண்கள் கூட்டமாக அங்கு நின்றதை கண்டு கண்ணாடி வழியாக கீழே குனிந்து பாா்த்தேன்.
மின் ஊழியர் உயிருக்கு போராடுவதை பார்த்ததும், உடனே போக்குவரத்து பாதிக்கப்பட்டாலும் பரவாயில்லை ஒரு உயிரை காப்பாற்ற வேண்டும் என்று எண்ணி பஸ்சை நிறுத்தி விட்டு அங்கு ஓடிச்சென்று டிரான்ஸ்பார்மரை ஆப்-செய்தேன்.
அதுவரை உயிருக்கு போராடிய மின் வாரிய ஊழியர் உயிர் பிழைத்ததை கண்டு உள்ளபடியே மன மகிழ்ச்சி ஏற்பட்டது. இதனால் பஸ்சை நேரத்திற்கு எடுக்க முடியவில்லை என்றாலும் ஒரு உயிரை காப்பாற்றிய திருப்தி கிடைத்து விட்டது. மேலும் பொதுமக்கள் இதுபோன்ற நேரங்களில் சம்பவ இடத்தில் வேடிக்கை பார்ப்பதை தவிர்த்து அவர்களை காப்பாற்ற முயற்சிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.