குழாயடி சண்டைக்கு முற்றுப்புள்ளி... ஜல்ஜீவன் திட்டத்தால் விமோசனம்...


குழாயடி சண்டைக்கு முற்றுப்புள்ளி...  ஜல்ஜீவன் திட்டத்தால் விமோசனம்...
x

ஜல்ஜீவன் திட்டத்தால் பெண்களின் குழாயடி சண்டைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம்

மனிதனுக்கு இயற்கையின் வரமாக கிடைத்தது நீர். மனிதன் உணவு இல்லாமல் கூட உயிர் வாழ முடியும். ஆனால் தண்ணீர் அருந்தாமல் ஒருநாள் கூட இருக்க முடியாது. அந்தளவிற்கு மனிதனின் வாழ்வில் நீரானது அவசியமனதாக இருக்கிறது. மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் தாவரங்கள் மற்றும் அனைத்து உயிரினங்களுக்கும் நீர் மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது.

குடிநீரை அனைத்து மக்களுக்கும் தடையின்றி கிடைக்கச்செய்வது அரசின் தலையாய கடமையாகும். இதற்காக மத்திய, மாநில அரசுகள் ஆண்டுதோறும் நிதிநிலை அறிக்கையில் குடிநீர் திட்டங்களுக்கென்று குறிப்பிட்ட தொகையை ஒதுக்கீடு செய்து திட்டங்களை தீட்டி வருகிறது.

ஜல்ஜீவன் மிஷன் திட்டம்

அந்த வகையில் கிராமப்புறங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் இலக்குடன் ஜல்ஜீவன் மிஷன் என்ற திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியது. பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி சுதந்திர தின விழா உரையின்போது இத்திட்டத்தை அறிவித்தார்.

வருகிற 2024-ம் ஆண்டுக்குள் இந்தியா முழுவதுமுள்ள அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் குழாய்கள் மூலம் குடிநீர் இணைப்புகளை வழங்கி முடிக்க வேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

இத்திட்டத்தின் மூலம் கிராமப்புறங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் தனிப்பட்ட வீட்டு குழாய் இணைப்புகள் மூலம் பாதுகாப்பான மற்றும் போதுமான குடிநீர் வழங்க திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் குடிநீர் இணைப்பு வழங்கும் பணிகளுடன் குடிநீர் சம்பந்தமான இதர பணிகளையும் மேற்கொள்வதற்காக மத்திய அரசு சார்பில் 60 சதவீத நிதி ஒதுக்கீடும், மாநில அரசின் பங்களிப்பாக 40 சதவீத நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தில், மக்கள் குடிநீருக்காக அலையும் நிலையைப்போக்கி 55 லிட்டர் வரை குடிநீர் வழங்க திட்டமிடப்பட்டு அப்பணிகள் நடந்து வருகிறது.

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை ஜல்ஜீவன் மிஷன் திட்டம் மற்றும் ஒருங்கிணைப்பு நிதியின் கீழ் 2020-21-ம் ஆண்டுக்கு 78,606 வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. இது தவிர 58 ஆழ்துளை கிணறுகள், 52 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள், 727 கி.மீ. நீளத்துக்கு குடிநீர் விஸ்தரிப்பு பணிகள், 3 திறந்தவெளி கிணறுகள் அமைக்கும் பணிகளுக்கு ரூ.73 கோடியே 45 லட்சத்து 12 ஆயிரம் மதிப்பில் 257 ஊராட்சிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு 313 பணிகள் ரூ.61 கோடியே 95 லட்சத்து 66 ஆயிரம் செலவினத்தில் முடிக்கப்பட்டுள்ளது. மீதியுள்ள பணிகள் நடந்து வருகிறது.

மேலும் 15-வது நிதிக்குழு மானிய திட்டத்தில் 53,541 வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்புகள், 527 கி.மீ. நீளத்துக்கு குடிநீர் விஸ்தரிப்பு பணிகளுக்கு ரூ.37 கோடியே 18 லட்சத்து 9 ஆயிரத்துக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு 700 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இதற்காக ரூ.36 கோடியே 88 லட்சம் தொகை விடுவிக்கப்பட்டு உள்ளது. இதுதவிர அம்மா ஆதிதிராவிடர் திட்டத்தில் 922 வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

2021-22-ம் ஆண்டுக்கு 15-வது மானிய நிதித்திட்டத்தின் கீழ் 38,221 வீடுகளுக்கு குடிநீர் குழாய் அமைக்கும் பணிகளுக்கு ரூ.30 கோடியே 71 லட்சத்து 52 ஆயிரம் மதிப்பிலான பணிகள் நடந்து வருகிறது. 2022-23-ம் ஆண்டுக்கு 136 குக்கிராமங்களில் 36,234 வீடுகளுக்கு குடிநீர் குழாய் அமைக்கும் பணிகள் ரூ.30 கோடியே 23 லட்சம் மதிப்பில் மேற்கொள்ள நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் 15-வது மானிய நிதி திட்டத்தின் கீழ் 38,221 குடிநீர் குழாய் அமைக்கும் பணிகளை முடிக்கவும் திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வருகிறது. இவ்வாறு வீடுகள்தோறும் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டாலும் ஒரு சில இடங்களில் குழாய் இணைப்பு இருக்கிறதே தவிர, தண்ணீர் வரவில்லை என்ற நிலையும் உள்ளது. ஆகவே தங்களுக்கு சீரான முறையில் சுகாதாரமான குடிநீர் வினியோகம் செய்ய வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story