'ஆன்லைன்' சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் கொள்ளையனாக மாறிய என்ஜினீயர் கைது


ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் கொள்ளையனாக மாறிய என்ஜினீயர் கைது
x

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் கொள்ளையனாக மாறிய என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை,

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் தமிழ்செல்வி. இவருடைய உறவினர் திருமண நிகழ்ச்சி சென்னை மேற்கு மாம்பலத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக தமிழ்செல்வி வந்திருந்தார்.

அவர், திருமண மண்டபம் நோக்கி நடந்து சென்றபோது, மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் திடீரென்று அவர் அணிந்திருந்த தங்கச்சங்கிலியை பறித்தார். சுதாரித்துக்கொண்ட தமிழ்செல்வி, திருடன்..., திருடன்..., என்று கூச்சலிட்டார்.

அவருடைய சத்தம் கேட்டு சாலையில் சென்றவர்கள் அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர். பின்னர் தர்ம அடி கொடுத்து அவரை அசோக்நகர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

அவரை இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் கைது செய்து விசாரணை நடத்தினார். அதில் அவர், கே.கே.நகர் பகுதியை சேர்ந்த என்ஜினீயர் சரவணன் (24) என்பது தெரிய வந்தது.

திருடனாக மாறியது ஏன்?

அவர் அளித்த அதிர்ச்சி வாக்குமூலம் வருமாறு:-

நான் நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறேன். நான் 'ஆன்லைன்' சூதாட்ட மோகத்தில் சிக்கி லட்சக்கணக்கில் பணத்தை இழந்துவிட்டேன்.

நெருங்கிய நண்பர்களிடமும் கடனாளி ஆனேன். கடன் அன்பை முறிக்கும் என்பதற்கு ஏற்ப நண்பர்களும் எதிரிகளாக மாறினர். கொடுத்த பணத்தை கேட்டு நெருக்கடி கொடுத்தனர். இது எனக்கு அவமானத்தை ஏற்படுத்தியது. என்னுடைய வருமானத்தில் இந்த கடனை உடனடியாக அடைக்க முடியாது என்பதால், குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க நினைத்தேன்.

திரைப்பட காட்சிகள்

அப்போது சில திரைப்படங்களில் சங்கிலி பறிப்பு சம்பவங்கள் நினைவுக்கு வந்தது. எனவே சிக்காமல் நகை பறிப்பது? எப்படி என்பதை சமூக வலைத்தளங்களில் உள்ள திரைப்பட காட்சிகளை மீண்டும், மீண்டும் பார்த்தேன். அதன்படி நகைப்பறிப்பில் ஈடுபட்டேன். நகைப்பறித்தவுடன் பதற்றம் அடைந்துவிட்டேன். இதனால் நான் சிக்கிவிட்டேன்.

இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

'ஆன்லைன்' சூதாட்டத்தில் பணத்தை இழப்பவர்கள் தற்கொலை முடிவை தேடுகிறார்கள். மற்றொருபுறம் மனநோயாளிகளாகவும், இதுபோல சமூகவிரோத செயல்களில் ஈடுபடுவோராகவும் மாறுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story