நண்பர்களுடன் கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி என்ஜினீயரிங் மாணவர் பலி


நண்பர்களுடன் கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி என்ஜினீயரிங் மாணவர் பலி
x

நண்பர்களுடன் கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி என்ஜினீயரிங் மாணவர் பலியானார்.

சென்னை

சென்னை அம்பத்தூர் வெங்கடாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார். இவருடைய மகன் ரோஷன் (வயது 20). இவர், ஆவடியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

இவர், நேற்று மதியம் அதே கல்லூரியில் தன்னுடன் படிக்கும் மாணவர் ஷியான் (21) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் எண்ணூர் காமராஜ் நகரைச் சேர்ந்த சக மாணவர் ரெனால்டோ (20) என்பவரை பார்க்க வந்தார். பின்னர் 3 பேரும் சேர்ந்து எண்ணூர் தாழங்குப்பம் அருகே கடலில் குளித்தனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக ராட்சத அலை 3 பேரையும் கடலுக்குள் இழுத்துச் சென்றது. இதில் ரோஷன், கடல் அலையில் சிக்கி மாயமானார். இதைப்பார்த்த கடற்கரையில் வலை பின்னிக்கொண்டிருந்த மீனவர்கள், உடனடியாக கடலில் குதித்து ரெனால்டோ, ஷியான் ஆகிய இருவரையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்து காப்பாற்றினர். பின்னர் அவர்களை ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து எவ்வளவு தேடியும் ரோஷன் கிடைக்கவில்லை. இதற்கிடையில் மாலையில் ரோஷனை தீயணைப்பு வீரர்கள் பிணமாக மீட்டனர். இதுகுறித்து எண்ணூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story