கறிக்கோழி கிலோவுக்கு ரூ.10 உயர்வு
நாமக்கல் மண்டலத்தில் 4 நாட்களில் கறிக்கோழி கிலோவுக்கு ரூ.10 உயர்ந்துள்ளது.
ரூ.10 உயர்வு
நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.103-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.3 உயர்த்த முடிவு செய்தனர். எனவே கறிக்கோழி விலை கிலோ ரூ.106 ஆக அதிகரித்து உள்ளது.
கடந்த 14-ந் தேதி கறிக்கோழி கிலோ ரூ.96-க்கு விற்பனை செய்யப்பட்டது. 4 நாட்களில் படிப்படியாக கிலோவுக்கு ரூ.10 உயர்ந்து இருப்பதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். சபரிமலை சீசன் தொடங்கி இருப்பதால் கறிக்கோழி உற்பத்தியை 20 சதவீதம் குறைத்து கொண்டோம். இதுவே விலை உயர்வுக்கு காரணம் என பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
முட்டை கொள்முதல் விலை 535 காசுகளாகவும், முட்டைக்கோழி விலை கிலோ ரூ.102 ஆகவும் நீடிக்கிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை என பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
20 சதவீதம்
இந்த விலை உயர்வு குறித்து நாமக்கல்லை சேர்ந்த கறிக்கோழி உற்பத்தியாளர்கள் கூறியதாவது :-
கறிக்கோழி ஒருங்கிணைப்புகுழு அதன் விலையை கிலோவுக்கு ரூ.106 என நிர்ணயம் செய்தாலும், வியாபாரிகள் ரூ.100-க்கு தான் பிடிக்கிறார்கள். அதேசமயம் ஒரு கிலோ உற்பத்தி செய்ய ரூ.105 செலவாகிறது. இதனால் ஒரு கிலோவுக்கு ரூ.5 இழப்பு ஏற்படுகிறது.
மேலும் கார்த்திகை மாதம் தொடங்கி இருப்பதால் சபரிமலைக்கு மாலை அணிந்து விரதம் கடைபிடிப்பார்கள். அதனால் முன்கூட்டியே இவற்றை எதிர்பார்த்து 20 சதவீதம் வரை உற்பத்தியை குறைத்து கொண்டோம். அதன் காரணமாக வாரம் 2½ கோடி கிலோ உற்பத்தி செய்து வந்த நிலையில், தறபோது அது 2 கோடி கிலோவாக குறைந்து உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.