நாகமலைபுதுக்கோட்டையில் தொழிற்பேட்டை உருவாக்க வேண்டும்
நாகமலைபுதுக்கோட்டையில் தொழிற்பேட்டை உருவாக்க வேண்டும் என்று கலெக்டரிடம் ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்தார்.
திருப்பரங்குன்றம்,
நாகமலைபுதுக்கோட்டையில் தொழிற்பேட்டை உருவாக்க வேண்டும் என்று கலெக்டரிடம் ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்தார்.
தென்கால் கண்மாயில் படகு சவாரி
ஒவ்வொரு சட்டசபை தொகுதிகளிலும் 10 குறைகளை எம்.எல்.ஏ.க்கள் கலெக்டரிடம் வழங்க வேண்டும். அதனை தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து இருந்தார். அதன்படி மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகரிடம் திருப்பரங்குன்றம் சட்டமன்றத்தொகுதி பிரச்சினைகளை மதுரை புறநகர் அ.தி.மு.க. கிழக்கு மாவட்டச்செயலாளர் ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. மனு கொடுத்தார். பின்னர் கலெக்டரிடம் கொடுத்த மனு குறித்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-
திருப்பரங்குன்றம் தென்கால் கண்மாய் 350 ஏக்கர் பரப்பளவில் உள்ளது.அதில் நிரந்தரமாக தண்ணீரை தேக்கிவைக்க வேண்டும். மேலும் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள், சுற்றுலாப்பயணிகள் பயன்பாட்டிற்கு படகு சவாரி மற்றும் நடைபாதை உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய சுற்றுலா தலம் அமைக்க வேண்டும்.
கலை அறிவியல் கல்லூரி
திருப்பரங்குன்றத்தில் மாணவ-மாணவிகள் படிப்பதற்கு வசதியாக புதிதாக அரசு இருபாலர் கலை அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும். திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்ட வளையங்குளம் பகுதியில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் வாசனை திரவிய தொழிற்சாலை அமைக்கப்பட வேண்டும்.
நிலையூர் பாசன கால்வாய் கழிவுநீர் உபரி கால்வாயாக உள்ளது. அதை நிரந்தர பாசன கால்வாயாக தரம் உயர்த்தி ஆணை பிறப்பிக்க வேண்டும். ஆக்கி வீரர்களை உருவாக்க கூடிய திருநகர் அண்ணா பூங்கா விளையாட்டு மைதானத்தை சர்வதேச தரத்தில் செயற்கை இழை ஆக்கி மைதானமாக உருவாக்கிட வேண்டும்
தொழிற்பேட்டை
நாகமலைபுதுக்கோட்டையில் தொழில் பேட்டை உருவாக்க வேண்டும். கைத்தறி நெசவு செய்பவர்கள் அதிகம் உள்ளதால் நிலையூர் கைத்தறி நகரில் நெசவாளர்களின் வாழ்வாதாரம் மேம்பட அரசு கைத்தறிக்கூடம் அமைக்கலாம்.
அவனியாபுரத்தில் உணவு தானியம் பதப்படுத்துதல் அமைக்கலாம். .திருமங்கலம் நீட்டிப்பு கால்வாயை தென்பழஞ்சி, சாக்கிலிபட்டி, வேடர்புளியங்குளம், தனக்கன்குளம், தோப்பூர் வரை நீடித்து அனைத்து கண்மாய்களுக்கும் வைகை தண்ணீர் கொண்டுவருவதற்கு நீர்வழிச் சாலையை ஏற்படுத்த வேண்டும்.
திருப்பரங்குன்றம் அரசு பொது மருத்துவமனையில் நவீன ஸ்கேன் சென்டர் மற்றும் ஜெனரேட்டர் வசதி ஏற்படுத்த வேண்டும்.
மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுக்கப்பட்டு உள்ளதாக அவர் தெரிவித்தார்.
பேட்டியின்போது மதுரை புறநகர் எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாவட்ட செயலாளர் வக்கீல் ரமேஷ், திருப்பரங்குன்றம் ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.