கிணற்றில் தவறி விழுந்து முதியவர் பலி
குஜிலியம்பாறை அருகே கிணற்றில் தவறி விழுந்து முதியவர் பலியானார்.
குஜிலியம்பாறை அருகே பால்வார்பட்டியை சேர்ந்தவர் பேர்நாயக்கர் (வயது 80). இவர் நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்றவர் வெகுநேரமாகியும் திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் அவரை தேடிப்பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. இந்தநிலையில் வீட்டின் அருகே உள்ள கிணற்றுக்கு சென்று பார்த்தபோது அவர் அணிந்திருந்த காலணி கிடந்தது. இதனையடுத்து அவர் கிணற்றுக்குள் தவறி விழுந்தது தெரியவந்தது. இதுகுறித்து குஜிலியம்பாறை போலீசாருக்கும், குஜிலியம்பாறை தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு குஜிலியம்பாறை தீயணைப்பு நிலைய அலுவலர் கணேசன் தலைமையில் படை வீரர்கள் விைரந்து வந்து பேர்நாயக்கரை தேடும் பணியில் ஈடுபட்டனர். இரவு நேரம் என்பதாலும், மின்விளக்கு வசதி இல்லாததாலும் தேடும் பணி நிறுத்தப்பட்டது. பின்னர் நேற்று காலை மீண்டும் முதியவரை தேடும் பணி தொடங்கியது. சுமார் 2 மணி நேரம் போராடி பேர்நாயக்கர் உடலை மீட்டனர். சம்பவ இடத்துக்கு வந்த குஜிலியம்பாறை போலீசார், அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.