பஸ் சக்கரத்தில் சிக்கி மூதாட்டி தலைநசுங்கி பலி
செய்துங்கநல்லூர் அருகே நடந்த விபத்தில் பஸ் சக்கரத்தில் சிக்கி மூதாட்டி தலைநசுங்கி பலியானார். கணவர்-பேரன் படுகாயம் அடைந்தனர்.
ஸ்ரீவைகுண்டம்:
செய்துங்கநல்லூர் அருகே நடந்த விபத்தில் பஸ் சக்கரத்தில் சிக்கி மூதாட்டி தலைநசுங்கி பலியானார். கணவர்-பேரன் படுகாயம் அடைந்தனர்.
வாரச்சந்தைக்கு சென்றபோது...
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே அரசர்குளம் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுடலை (வயது 65). பனையேறும் தொழிலாளி. இவருடைய மனைவி முத்தம்மாள் (60).
இவர்கள் இருவரும் நேற்று மாலையில் தங்களது பேரன் உதயசங்கரை (3) அழைத்துக் கொண்டு செய்துங்கநல்லூரில் வாரச்சந்தையில் பொருட்கள் வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றனர்.
பஸ் சக்கரத்தில் சிக்கி...
செய்துங்கநல்லூரை அடுத்த கீழ தூதுகுழி அருகில் ெசன்றபோது, அங்கு சாலை வளைவில் வைக்கப்பட்டு இருந்த பேரிகார்டில் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்த 3 பேரும் நிலைதடுமாறி சாலையில் விழுந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் கண்ணிமைக்கும் நேரத்தில் முத்தம்மாள் மீது மோதியது. இதில் பஸ் சக்கரத்தில் சிக்கிய அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
2 பேர் படுகாயம்
அந்த வழியாக சென்றவர்கள் இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து செய்துங்கநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். படுகாயங்களுடன் சாலையில் கிடந்த சுடலையையும், உதயசங்கரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இறந்த முத்தம்மாள் உடலையும் போலீசார் கைப்பற்றி பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். செய்துங்கநல்லூர் அருகே பஸ் சக்கரத்தில் சிக்கி மூதாட்டி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
----------