வழிகாட்ட முடியாத வழிகாட்டி பலகை....


வழிகாட்ட முடியாத வழிகாட்டி பலகை....
x
தினத்தந்தி 25 Oct 2023 7:30 PM GMT (Updated: 25 Oct 2023 7:30 PM GMT)

ஆனைக்கட்டியில் வழிகாட்ட முடியாத வழிகாட்டி பலகை....

கோயம்புத்தூர்

ஆனைக்கட்டி

சாலையில் செல்பவர்களுக்கு வழிகாட்டுவதில் முக்கியமாக இருப்பது வழிகாட்டி பலகை. இந்த பலகையில் எந்த ஊருக்கு எப்படி செல்ல வேண்டும், எத்தனை கி.மீ. தூரம் என்ற தகவல் இடம் பெற்று இருக்கும். இது வாகனங்களில் செல்பவர்களுக்கு பெரிதும் உதவியாக இருந்து வருகிறது. கோவை மாவட்டத்தில் சாலை ஓரத்தில் ஏராளமான வழிகாட்டி பலகை வைக்கப்பட்டு உள்ளது. ஆனால் அவை முறையாக பராமரிக்கப்படுகிறதா என்றால் அது கேள்விக்குறிதான். கோவை அருகே உள்ள ஆனைக்கட்டியில் உள்ள தமிழக-கேரள எல்லையில் ஆனைக்கட்டி எல்லையில் உள்ள ஆற்று பாலத்தில் இருந்து கோவைக்கு வரும் வழியில் சாலையின் இடதுபுறம் ஒரு வழிகாட்டி பலகை வைக்கப்பட்டு இருக்கிறது. அந்த பலகையில் சேலத்துக்கு 188 கி.மீ., மதுரைக்கு 249 கி.மீ., பழனிக்கு 138 கி.மீ., திருச்சிக்கு 234 கி.மீ. என்று எழுதப்பட்டு இருக்கிறது. ஆனால் அந்த வழிகாட்டி பலகையை அதன் அருகே உள்ள மரத்தின் கிளைகள் ஆக்கிரமித்துவிட்டது. இதனால் அந்த வழிகாட்டி பலகையில் எழுதப்பட்டு இருப்பது அந்த வழியாக செல்பவர்களுக்கு தெரியாமல் இருந்து வருகிறது. இது குறித்து அந்தப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறியதாவது:-

வழிகாட்ட முடியாத அந்த வழிகாட்டி பலகையை சரிசெய்ய வேண்டும் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது உள்ள நவீன காலத்தில் செல்போனில் எல்லாம் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்றாலும், சாலை ஓரத்தில் வைக்கப்பட்டு உள்ள இதுபோன்ற வழிகாட்டி பலகையும் வாகன ஓட்டிகளுக்கு பயனாக இருக்கிறது.

எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த வழிகாட்டி பலகையை ஆக்கிரமித்து உள்ளதை அகற்றி வாகன ஓட்டிகளுக்கு தெளிவாக தெரியும்படி வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story