தலைகுப்புற கவிழ்ந்த கார்


தலைகுப்புற கவிழ்ந்த கார்
x

நாய் குறுக்கே வந்ததால் தலைகுப்புற கார் கவிழ்ந்த விபத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் காயம் அடைந்தனர்.

திண்டுக்கல்

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்தவர் மருதை (வயது 53). இவர், சொட்டுநீர் பாசனம் அமைக்கும் தொழில் நிறுவனம் நடத்தி வருகிறார். அவருடைய மனைவி சாந்தி (45). இவர்களது மகள் ஐஸ்வர்யா (21). கல்லூரி மாணவி. இவர்கள் 3 பேரும், திண்டுக்கல் அருகே தாடிக்கொம்புவில் உள்ள சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்ய முடிவு செய்தனர்.

இதற்காக தனது மனைவி, மகளுடன் தாடிக்கொம்பு நோக்கி மருதை காரில் வந்தார். காரை, மருதை ஓட்டினார். வேடசந்தூர்-ஒட்டன்சத்திரம் சாலையில் சீத்தாமரம் நால்ரோடு என்னுமிடத்தில் கார் வந்து கொண்டிருந்தது. அங்குள்ள தனியார் பால்பண்ணை அருகே கார் வந்தபோது, சாலையின் குறுக்கே நாய் புகுந்தது. அதன் மீது கார் மோதாமல் இருக்க மருதை திடீர் பிரேக் போட்டார்.

இதில் மருதையின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையோர பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஐஸ்வர்யாவில் கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது. மருதை, சாந்தி ஆகியோருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதனைக்கண்ட அக்கம்பக்கத்தினர், 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். பின்னர் அவர்கள், மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வேடசந்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story