ஆனைகுடி முத்துசிவன் முத்தாரம்மன் கோவில் கும்பாபிஷேக விழா தொடக்கம்

திசையன்விளை அருகே உள்ள ஆனைகுடி முத்துசிவன் முத்தாரம்மன் கோவில் கும்பாபிஷேக விழா தொடங்கியது.
திசையன்விளை:
திசையன்விளை அருகே ஆனைகுடி முத்துசிவன் முத்தாரம்மன் கோவில் அழகிய கலைநயத்துடன் புதுப்பித்து கட்டபட்டு உள்ளது. கோவிலில் கும்பாபிஷேக விழா நேற்று மாலையில் மங்ள இசை, கிராம தேவதைகள் வழிபாட்டுடன் தொடங்கியது. தொடர்ந்து சப்தகன்னி பூஜை நடந்தது. சீருடை அணிந்த சிறுமிகள் காலில் மஞ்சள் குங்குமம் பூசி, கழுத்தில் மாலை அணிந்து, குதிரைகள் முன் செல்ல ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். விழாவில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
இன்று (செவ்வாய்க்கிழமை) இரவில் முதலாம் கால யாகசாலை பூஜை, சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. நாளை (புதன்கிழமை) காலையில் 2-ம் கால யாகசாலை பூஜை, இரவில் 3-ம் கால யாகசாலை பூஜை, சிறப்பு பூஜைகள் நடக்கிறது.
விழாவின் சிகர நாளான நாளை மறுநாள் (வியாழக்கிழமை) காலையில் 4-ம் கால யாகசாைல பூஜையை தொடர்ந்து 7.40 மணிக்கு விமான கும்பாபிஷேகம், மூலஸ்தானம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. விழா நாட்களில் தினமும் 3 வேளையும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை விழா குழுவினர், ஊர் மக்கள் செய்துள்ளனர்.






