ஆனைமலையாறு-நல்லாறு திட்டம் நிறைவேற்றப்படும்
கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது, ஆனைமலையாறு-நல்லாறு திட்டம் நிறைவேற்றப்படும் என்று அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறினார்.
பொள்ளாச்சி
கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது, ஆனைமலையாறு-நல்லாறு திட்டம் நிறைவேற்றப்படும் என்று அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறினார்.
பி.ஏ.பி. திட்ட தினம்
மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழைநீர் வீணாக கடலுக்கு செல்வதை தடுக்க பி.ஏ.பி. திட்டம் உருவாக்கப்பட்டது. இது முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜர் ஆட்சி காலத்தில் நிறைவேறியது. இந்த திட்டம் உருவாக காரணமாக இருந்தவர்களுக்கு உருவ சிலை அமைப்பது, அதுதொடங்கப்பட்ட நாளான 1961-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 7-ந் தேதி பி.ஏ.பி. பாசன திட்ட தினமாக கடைபிடிப்பது என்று அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் பி.ஏ.பி. திட்ட தினத்தையொட்டி அதற்காக பாடுப்பட்டவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்துகொண்டு முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜர், முன்னாள் எம்.எல்.ஏ. வி.கே.பழனிசாமி கவுண்டர், முன்னாள் மத்திய மந்திரி சி.சுப்பிரமணியம், முன்னாள் எம்.எல்.ஏ. நா.மகாலிங்கம், டாக்டர் கே.எல்.ராவ் ஆகியோரின் உருவப்படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டனர். இதில் செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனர் ஜெயசீலன், மாவட்ட கலெக்டர் சமீரன், திருப்பூர் வருவாய் கோட்டாசியர் யஸ்வந்த் கண்ணன், முன்னாள் மத்திய மந்திரி மு.கண்ணப்பன், தி.மு.க. விவசாய அணி மாநில துணை தலைவர் தமிழ்மணி, பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் முத்துசாமி மற்றும் பலர் கலந்துகொண்டனர். பின்னர் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறியதாவது:-
ஆனைமலையாறு திட்டம்
கொங்கு மண்டலத்தில் மிகப்பெரிய பாசன திட்டமான பரம்பிக்குளம்-ஆழியாறு பாசன திட்டம் மலைகளை குடைந்தும், இரு மலைகளை இணைத்தும் உருவாக்கிய அற்புதமான திட்டமாகும். இதற்கு உறுதுணையாக இருந்தவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் பி.ஏ.பி. திட்ட அலுவலக வளாகத்தில் இரு தளம் கொண்ட மாளிகை அமைக்கப்படுகிறது. இங்கு திட்டத்திற்கு முயற்சி எடுத்தவர்களுக்கு சிலையும், திட்டத்தை குறித்து அறிந்து கொள்ளும் வகையில் புகைப்பட கண்காட்சியும் அமைக்கப்பட உள்ளது. வி.கே.பழனிசாமிக்கு ஆழியாறு அணைபூங்காவில் நினைவு மண்டபம் அமைக்கப்படும். இது, பி.ஏ.பி. திட்டப்பணிகள் நடைபெற்றபோது ஏற்பட்ட விபத்தில் உயிர்நீத்தவர்களுக்கான நினைவுமண்டபமாக மாற்றி அமைக்கப்படும். தமிழக முதல்-அமைச்சர் கேரளா சென்ற போது கேரள முதல்-மந்திரியிடம் கொடுத்த கடிதத்தில்,பி.ஏ.பி. திட்டத்தில் உள்ள ஒப்பந்த அடிப்படையில் ஆனைமலையாறு-நல்லாறு போன்ற திட்டங்களை நிறைவேற்ற துணை ஒப்பந்தம் போட வேண்டும். ஏனென்றால் கேரளா இடமலையாறு அணை கட்டி விட்டால் துணை ஒப்பந்தம் போடலாம் என்று உள்ளது. அதன் அடிப்படையில் நினைவூட்டப்பட்டு உள்ளது. இரு மாநில அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அதன்பிறகு இரு மாநில நீர்பாசனத்துறை அமைச்சர்கள் பேசுவார்கள். பின்னர் முதல்-அமைச்சர்கள் மத்தியில் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
காமராஜர் உருவப்படம்
பி.ஏ.பி. பாசன திட்ட தினத்தில் வி.கே.பழனிசாமி கவுண்டர், சி.சுப்பிரமணியம், நா.மகாலிங்கம், கே.எல்.ராவ் ஆகியோருக்கு மரியாதை செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த திட்டத்திற்கு வித்திட்ட அப்போதைய பிரதமர் நேரு, முதல்-அமைச்சர் காமராஜர் ஆகியோரின் பெயர்கள் இடம்பெறவில்லை. இதற்கு காங்கிரஸ், த.மா.கா. கட்சிகள் மற்றும் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை தொடர்ந்து நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பாக காமராஜர் உருவப்படம் கொண்டு வந்து வைக்கப்பட்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.