குப்பை கிடங்காக மாறி வரும் ஆனந்தவல்லி வாய்க்கால்


குப்பை கிடங்காக மாறி வரும் ஆனந்தவல்லி வாய்க்கால்
x

பேராவூரணியில் உள்ள ஆனந்தவல்லி வாய்க்கால் குப்பை கிடங்காக மாறி வருகிறது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சாவூர்

பேராவூரணி:

பேராவூரணியில் உள்ள ஆனந்தவல்லி வாய்க்கால் குப்பை கிடங்காக மாறி வருகிறது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனந்தவல்லி வாய்க்கால்

தஞ்சை மாவட்டம் பேராவூரணி நகரப் பகுதிக்குள் ஆனந்த வல்லி வாய்க்கால் செல்கிறது. காவிரி ஆற்றின் கிளை வாய்க்காலில் இருந்து பிரிந்து பழையநகரம், மாவடுக்குறிச்சி, பொன்காடு, பேராவூரணி நகர் பகுதி, நீலகண்டபுரம், கழனிவாசல், கொரட்டூர் வரை செல்லும் இந்த ஆனந்தவல்லி வாய்க்கால் பல 100 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது.

விவசாய பாசனத்துக்கு உதவும் ஆனந்தவல்லி வாய்க்காலில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் வாய்க்கால் அமைந்துள்ள பகுதிகளில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. குப்பை கிடங்காக ஆனந்தவல்லி வாய்க்கால் மாறி வருவதால், வாய்க்காலில் குப்பை கொட்டுவதை தடுக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிளாஸ்டிக் கழிவுகள்

ஆனந்தவல்லி வாய்க்காலின் கரையின் இரு புறங்களிலும் முட்புதர்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. மேலும் பேராவூரணி நகர் பகுதிக்குள் செல்லும் ஆனந்தவல்லி வாய்க்காலில், குப்பைகளுடன் பிளாஸ்டிக் கழிவுகள் நிறைந்து காணப்படுகிறது. அத்துடன் வீட்டின் மேல் கூரை வேய பயன்படும் தென்னங்கீற்றுகளும் கொட்டப்பட்டுள்ளன. வாய்க்கால் முழுவதும் குப்பை, கூளங்களாக காட்சி அளிக்கிறது.

ஆங்காங்கே குப்பைகளை தீ வைத்து கொளுத்தும் நிலைமை உள்ளது. ஆனந்தவல்லி வாய்க்காலில் குப்பை கொட்டுவதை தடுக்கவும், வாய்க்காலின் இருபுற கரைகளையும் சுத்தம் செய்து, நீர் தங்கு தடையின்றி செல்லும் வகையில் தூர்வார வேண்டும் என்றும், முட்புதர்களை அகற்ற வேண்டும் என்றும், பிளாஸ்டிக் கழிவுகளை சுத்தம் செய்து எப்போதும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்பது அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்பாகும்.


Next Story