குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்குவது குறித்த அறிவிப்பை வெளியிட வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்குவது குறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
சென்னை,
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
"புதுவையில் 21 வயது முதல் 57 வயது வரையிலான குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என்று அம்மாநில நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
21 வயதுக்கும் மேற்பட்ட குடும்பத் தலைவிகளுக்கு மட்டும்தான் உதவித்தொகை என அறிவிக்கப்பட்டிருப்பதன் மூலம் 21 வயதுக்கு முன்பு திருமணம் செய்வது குறையும். அந்த வகையில் இது மகளிர் மற்றும் சமுதாய மேம்பாட்டிற்கும் வழிவகுக்கும்.
தமிழ்நாட்டில் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. புதிய அரசு பதவியேற்று இரு நிதிநிலை அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு விட்ட நிலையில் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.
குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை வழங்குவது மகளிர் உரிமைக்கும், சமூக முன்னேற்றத்திற்கும் வழிவகுக்கும். எனவே, இந்த விவகாரத்தில் இனியும் தாமதம் செய்யாமல் மகளிர் உரிமைத் தொகை குறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.