பழமையான நடுகல் கண்டெடுப்பு


பழமையான நடுகல் கண்டெடுப்பு
x
தினத்தந்தி 22 Aug 2023 1:04 AM IST (Updated: 22 Aug 2023 1:10 PM IST)
t-max-icont-min-icon

திருச்சுழி அருகே பழமையான நடுகல் கண்டெடுக்கப்பட்டது.

விருதுநகர்

காரியாபட்டி,

திருச்சுழி அருகே பழமையான நடுகல் கண்டெடுக்கப்பட்டது.

வீர மரணம்

திருச்சுழி தாலுகா கட்டனூர் கிராமத்தில் பாண்டியநாடு பண்பாட்டு மைய தொல்லியல் கள ஆய்வாளர்களான செல்ல பாண்டியன், ஆய்வாளர் ஸ்ரீதர், தாமரைக்கண்ணன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அவர்கள் தெப்பக்குளத்திற்குள் பழமையான நடுகல்லை கண்டறிந்தனர்.

இந்த நடுகல் குறித்து அவர்கள் கூறியதாவது:-

பொதுவாக நடுகல் எடுக்கும் மரபு நமது முன்னோர்கள் பன்னெடுங்காலமாகவே பின்பற்றிவருகின்றனர். போர்களில் ஈடுபட்டு வீரமரணம் அடைபவர்களுக்கும், பொதுகாரியம் கருதி உயிர் துறப்பவர்களுக்கும் அவரின் தியாகத்தை போற்றி நடுகல் எடுத்து வழிபடுவர்.

கல்வெட்டு

அந்த வகையில் தற்போது நாங்கள் கண்டறிந்த நடுகல்லானது 4 அடி உயரமும், 2 அடி அகலமும் கொண்ட பலகைக்கல்லில் புடைப்புச் சிற்பமாக செதுக்கி உள்ளனர்.

அதில் வீரன் ஒருவன் தலைப்பகுதியில் இடது புறம் சரிந்த கொண்டையுடனும், நீண்ட காதுகளும், மார்பில் ஆபரணங்களும் செதுக்கப்பட்டுள்ளன. இடையில் இடைக்கச்சையும் அதில் குறுவாள் சொருகியபடியும் நின்றகோலத்தில் வணங்கியபடி சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. சிற்பத்தின் மேலே கிடைமட்டமாக 14 வரிகளும், மேலிருந்து கீழாக இரண்டு வரிகளும் என தமிழ் கல்வெட்டில் 16 வரிகளில் பொறிக்கப்பட்டுள்ளது.

கங்கை கரை

இவற்றில் உள்ள எழுத்துக்கள் முற்றிலும் சேதமாகியுள்ளதால் பொருள் அறிவதில் சிரமம் உள்ளது. ஆயினும் சில வரிகள் வாசிக்கும்படி உள்ளது.

அவற்றில் வெகு தானிய (பகுதானிய) வருடம் என்று தமிழ் ஆண்டுகள் அறுபதில் 12-வது வருடமாக வரும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஆனி மாதம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கல்லிற்கு சேதம் விளைவிப்பருக்கு கங்கை கரையில் காராம் பசுவை கொன்ற தோஷத்தில் போவான் என்றும் எழுதப்பட்டுள்ளது. இவற்றை வைத்து பார்க்கும் போது இவ்வீரன் ஊரின் நன்மை பயக்கும் செயலில் ஈடுபட்டு இறந்திருக்க வேண்டும்.

200 ஆண்டுகள்

அவரின் தியாகத்தை போற்றும் விதமாக இந்த நடுகல்லை நிறுவி இருக்க வேண்டும்.

இந்நடுகல்லை தற்போது சீர்காழியை சேர்ந்தவர்களும், இவ்வூர் பொதுமக்களும் வழிபட்டு வருகின்றனர். இந்நடுகல் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக கருதலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Related Tags :
Next Story