மேலும் ஒருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
தஞ்சை ஆடிட்டர் கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் ஒரு வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
தஞ்சாவூர்
தஞ்சை கரந்தை சேர்வைக்காரன் தெருவை சேர்ந்தவர் மகேஸ்வரன் (வயது45). ஆடிட்டர். இவர் தனது வீட்டுக்கு அருகே உள்ள பண்ணை வீட்டில் இருந்த போது வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக கரந்தை ஆனந்தம் நகரை சேர்ந்த அரவிந்த் (27), சிவராமன்பிள்ளை சந்து சேர்வைக்காரன் தெருவை சேர்ந்த கார்த்திகேயன் (34), செல்லியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மணிகண்டன் (23), அரிக்கார தெருவை சேர்ந்த குமரேசன்(26), குளத்து மேட்டு தெருவை சேர்ந்த பரமசிவம் (30) ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும் ஒருவர் மீது குண்டர் சட்டம்
இதில் அரவிந்த், கார்த்திகேயன், மணிகண்டன், குமரேசன் ஆகிய 4 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது. இந்தநிலையில் பரமசிவத்தையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா பரிந்துரையின் பேரில் தஞ்சை மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா, ஆவணங்களை கலெக்டரிடம் தாக்கல் செய்தார்.
இதையடுத்து கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பரிசீலனை செய்து குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதையடுத்து பரமசிவம் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இதற்கான உத்தரவினை தஞ்சை மேற்கு போலீசார், திருச்சி மத்திய சிறை அதிகாரிகளிடம் சமர்ப்பித்தனர்.
Related Tags :
Next Story