ஆண்டாள் கோவில் தேரோட்டம் கோலாகலம்
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆடிப்பூரத்திருவிழாவைெயாட்டி நேற்று தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. “கோவிந்தா... கோபாலா...” பக்தி கோஷங்கள் முழுங்க பல்லாயிரக்கணக்கானோர் தரிசனம் செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆடிப்பூரத்திருவிழாவைெயாட்டி நேற்று தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. "கோவிந்தா... கோபாலா..." பக்தி கோஷங்கள் முழுங்க பல்லாயிரக்கணக்கானோர் தரிசனம் செய்தனர்.
ஆடிப்பூர திருவிழா
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோவில் உள்ளது. 108 வைணவ திவ்ய தேசங்களில் முக்கிய தலங்களில் ஒன்றாக இந்த கோவில் விளங்குகிறது.
ஆண்டாள், பெரியாழ்வார் என 2 ஆழ்வார்கள் அவதரித்த தலம் என்பதால் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு கூடுதல் சிறப்புகளும் உண்டு. மேலும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கோபுரம் தமிழக அரசின் முத்திரை சின்னமாகவும் உள்ளது.
இந்த கோவிலில் ஆண்டுேதாறும் ஆடி மாதம் ஆண்டாள் பிறந்த நட்சத்திரமான ஆடிப்பூரத்தை முன்னிட்டு திருவிழா தொடங்கி நடைபெறும். சிகர நிகழ்ச்சியாக ஆடிப்பூரம் அன்று தேரோட்டம் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். ஆண்டாள் கோவிலைப் போன்று ஆண்டாள் தேருக்கும் பல சிறப்புகள் உண்டு.
இந்த ஆண்டுக்கான ஆடிப்பூர திருவிழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 5 கருட சேவை, ரெங்கமன்னார் சயன சேவை மற்றும் பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
தேரோட்டம்
ஆடிப்பூரதினமான நேற்று சிகர நிகழ்ச்சியாக தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது.
இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு ஆண்டாள், ெரங்கமன்னார் சிறப்பு அலங்காரத்தில் கோவிலில் இருந்து புறப்பட்டு தேரில் எழுந்தருளினர். காலை 8.05 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு தேர் இழுக்கப்பட்டது.
விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன், போலீஸ் சூப்பிரண்டு சரவணபெருமாள், எம்.எல்.ஏ.க்கள் மான்ராஜ் (ஸ்ரீவில்லிபுத்தூர்), ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் (விருதுநகர்), முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன், சிவகாசி மேயர் சங்கீதா இன்பம், யூனியன் தலைவர் மல்லி ஆறுமுகம், வத்திராயிருப்பு யூனியன் தலைவர் சிந்து முருகன், ஸ்ரீவில்லிபுத்தூர் நகர்மன்ற தலைவர் தங்கம் ரவிக்கண்ணன், கோவில் தக்கார் ரவிச்சந்திரன் மற்றும் அரசு அதிகாரிகள் வடம்பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் "கோவிந்தா... கோபாலா..." என பக்தி கோஷங்கள் முழுங்கி தேர் இழுத்து, ஆண்டாள்-ரெங்கமன்னாரை தரிசனம் செய்தனர். பக்தர்கள் வெள்ளத்தில் ரத வீதிகளை வலம் வந்த தேர், காலை 10.20 மணி அளவில் நிலையை அடைந்தது. தேர் தரையில் பதியாமல் இருக்க ராட்சத இரும்பு பிளேட்டுகள் பல இடங்களில் போடப்பட்டு இருந்தன. தேரின் பின்புறம் இருந்து தள்ளுவதற்கு ராட்சத எந்திரங்களும் கொண்டுவரப்பட்டு இருந்தன.
சிறப்பு பஸ்கள்
தேரோட்டத்தை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. நகரில் போக்குவரத்து மாற்றமும் செய்யப்ட்டு இருந்தது.
நகராட்சி நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு இருந்தன. பலத்த பாதுகாப்பு ஏற்பாடும் செய்யப்பட்டு இருந்தது.
ராஜபாளையம் ராம்கோ நிறுவனம், வி.பி.எம்.எம். கல்வி நிறுவனங்கள், நகராட்சி நிறுவனங்கள், சேவை நிறுவனங்கள், ரோட்டரி சங்கத்தினர், தண்ணீர் பந்தல்கள் அமைத்து நீர் மோர் வழங்கினர். ஸ்ரீமான் கைங்கரியம் டிரஸ்ட் மற்றும் அரையர் வடபத்திர சாயி மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் அன்னதானமும் வழங்கப்பட்டது.