ஆண்டவன் உத்தரவு பெட்டியில் தீர்த்த கலசம் வைத்து பூஜை

காங்கயம் அருகே உள்ள சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் தீர்த்த கலசம் வைத்து பூஜிக்கப்படுகிறது.
காங்கயம் அருகே உள்ள சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் தீர்த்த கலசம் வைத்து பூஜிக்கப்படுகிறது.
கோவிலின் சிறப்பு
காங்கயம் அருகே உள்ள சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில் கொங்கு மண்டலத்தில் முருகப் பெருமான் குடி கொண்டிருக்கும் கோவில்களில் பிரசித்தி பெற்றதாகும். நாட்டில் வேறு எந்தக் கோவிலுக்கும் இல்லாத ஒரு சிறப்பாக இங்குள்ள ஆண்டவன் உத்தரவு பெட்டி விளங்குகிறது.
சுப்பிரமணியசாமியே பக்தர்களின் கனவில் தோன்றி குறிப்பிட்ட பொருளைக்கூறி அதை கோவில் முன்மண்டப தூணில் வைக்கப்பட்டுள்ள உத்தரவு பெட்டியில் வைக்க உத்தரவிடுவார். உத்தரவு பெற்ற பக்தர், கோவில் நிர்வாகத்தை அணுகி விவரத்தை கூறினால் சுவாமியிடம் பூ போட்டு கேட்டு அதன்பின்னர் கனவில் வந்த பொருளை உத்தரவு பெட்டியில் வைப்பார்கள்.
அடுத்த பொருள் பக்தரின் கனவில் உத்தரவாகும் வரை அந்தப் பொருள் உத்தரவு பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும். இவ்வாறு உத்தரவான பொருள் சமூகத்தில் ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அது நேர்மறையாகவும் இருக்கலாம், எதிர்மறையாகவும் இருக்கலாம்.
தீர்த்த கலசம்
இந்த நிலையில் காங்கயம் அருகே ஆறுதொழுவு பகுதியை சேர்ந்த சரவணன் (வயது 43) என்ற பக்தரின் கனவில் உத்தரவான தீர்த்த கலசம் நேற்று முதல் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைத்து பூஜிக்கப்பட்டு வருகிறது. இதற்கு முன்னதாக ஆண்டவன் உத்தரவு பெட்டியில் கடந்த மே மாதம் 3-ந் தேதி முதல் வெங்கக்கல் மற்றும் இரண்டு சிவப்பு கயிறு வைத்து பூஜிக்கப்பட்டு வந்தது.
இதுகுறித்து பக்தர்கள் தரப்பில் கூறுகையில், "தற்போது வைத்து பூஜிக்கப்படும் தீர்த்த கலசம் உலகெங்கும் நல்ல மழை பெய்யும் எனவும், அநீதி அழிக்கப்பட்டு நீதி நிலைநாட்டப்படும் என்பதை குறிக்கும் விதமாக உள்ளது. இருப்பினும் சமூகத்தில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது போக போக தெரியும்" என்று நம்பிக்கை தெரிவித்தனர்.






